என் வழி தனி வழி-இப்படியே இதே ரூட்டில் போனால், ஆக்ஷன் கிங் இடம்…. அண்ணே, உங்களுக்குதான்!

வெறும் காரட், முட்டை கோஸ்களுக்கு காக்கி சட்டை போட்டால் கூட கச்சென்று பொருந்திக் கொள்ளும்! அதுவே நச்சென்று இருக்கும் ஆர்கே போட்டால்? நெருப்பு துப்பாக்கியும், நேர் கொண்ட அம்புமாக மனுஷர் பின்னி எடுத்திருக்கிறார். படத்தில் அவருக்கு என்கவுன்ட்டர் ஏ.சி.பி வேஷம்! காக்கா குருவியை சுடுவது போல அவர் ரவுடிகளை சுட்டுத்தள்ளும் போதெல்லாம் தியேட்டருக்குள் புகை வருகிறது. இப்படியே இதே ரூட்டில் போனால், ஆக்ஷன் கிங் இடம்…. அண்ணே, உங்களுக்குதான்!

ஒரு போலீஸ் கதை என்றால், அதற்குள் சென்ட்டிமென்ட் இல்லேன்னா எப்படி? காதல் இல்லேன்னா எப்படி? வில்லன் போலீஸ் இல்லேன்னா எப்படி? எல்லாமும் இருக்கிறது. ஆனால் அளந்து போட்ட ருசியுடன்! இயக்கம் ஷாஜி கைலாஷ். ஆக்ஷன் வரவே வருக. அடிதடியை தொடர்க…

சிட்டியில் ரவுடிகளை போட்டுத்தள்ளும் ஏசிபி க்கு அவ்வப்போது கிராமத்திலிருக்கும் அம்மாவை பார்த்து அவர் கையால் சாப்பிடுவது ப்ரியம். அங்கேயே ஒரு முறைப்பொண்ணு வேறு. இடையிடையே டூயட் பாட வசதியாக இருக்கிறது அவர் இருப்பது. திடீரென்று ஆட்சி மாறுகிறது. அதுவரை இருந்த போலீஸ் டீம் அப்படியே மாற, ரவுடிகளுக்கு ஆதரவான கமிஷனர் வருகிறார். குவார்ட்டரை, முழுங்கி அதை போலீஸ் முகத்திலேயே கொப்பளிக்கும் ரவுடியை விட்டுவிட சொல்லும் அந்த கமிஷனர் பேச்சை கேட்பாரா ஆர்கே?. துப்பாக்கி எடுத்து போட்டால்தானே பிரச்சனை? அருவாளால் கழுத்தை திருகிப் போடுகிறார். தியேட்டரில் பலத்த கைத்தட்டல். அடுத்த காட்சியிலேயே ஆர்.கேவுக்கு எதிராக கட்டம் கட்டுகிறார்கள். அதற்கப்புறம் என்ன நடக்கிறது என்பது விறுவிறு.

முறுக்கு மீசை ஆர்.கேவுக்கு காதல் ஏரியாவில் மட்டும் கண்திருஷ்டி. அதுவும் பூனம் கவுர், இவர் மீது கொள்ளும் செல்ல கோபம் ரொம்பவே ஆர்ட்டிபிஷியல். சண்டை கோழியை சமைச்சு போட்டா உடம்புக்கு ஆரோக்கியம் என்று அவர் ஒரு சண்டைக்கோழியை கைமா செய்வதும், அந்த கோழியை தேடி சொந்தக்காரன் வருவதும் ட்ரை ஏரியாவில் சிக்கி முக்கி சிரிப்பு. அதற்கப்புறம் வருவதுதான் படு ஸ்டிராங்கான அம்மா சென்ட்டிமென்ட்.

ஏற்கனவே அரை வேதனையோடு இருக்கும் ஆர்.கேவின் கண் முன்னால் அவரது அம்மா சீதாவை சுட்டுவிட்டு தப்பிக்கும் வில்லன் கோஷ்டியை பொட்டு பொட்டென்று அவர் போட்டுத்தள்ளுகையில் ஆர்ப்பாட்டமாகிறது தியேட்டர். பயங்கரமாக உதார் காட்டும் ஆசிஷ்வித்தியார்த்தியை பொசுக்கென்று போட்டுத்தள்ளும் ஆர்கே அண் கோவின் டுமீல், செம ட்விஸ்ட்! இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும், வில்லனுக்கெல்லாம் வில்லியாக வந்திறங்கும் ரோஜாவின் கேரக்டர்தான் பலே பலே!

தனது கட் அவுட்டை தாக்கியவனை உயிரோடு புதைப்பதில் துவங்குகிறது அவரது ஆக்ஷன். தூத்துக்குடியின் ஒரு நிஜ எம்.பி யை கண் முன் நிறுத்துகிறது அவரது கேரக்டர் வடிவமைப்பு. எப்படியோ, ரோஜா சரியும்போது ஒழிஞ்சாடா ராட்சசி என்ற எண்ணம் வரணுமே, அது மிஸ்சிங் அண்ணாச்சி. ஏன்? அவர் ரோஜா என்பதாலா? உளவியல் ரீசன் அது.

இந்த படத்தில் கண்ணை மூடிக் கொண்டு வெட்டித்தள்ள வேண்டிய ஒரே போர்ஷன் நகைச்சுவை போர்ஷன்தான். சிங்கமுத்துவும், தம்பி ராமய்யாவும் படுத்தி எடுக்கிறார்கள். கஞ்சா கருப்பு காலாவதியான காலத்தில் கூட, இதைவிட நன்றாக சிரிப்பு மூட்டியதாக நினைவு. இது அதையெல்லாம் விட திராபை!

உங்களுக்கு நான்தான் போட்டி என்பது போல மேற்படி காமெடியன்களுக்கு சவால் விடுகிறார் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா. ஒரு பாடலாவது காது கொடுத்து கேட்கணுமே? ஹையோ… நல்லவேளை . பின்னணி இசையில் தப்பிக்கிறார். ராஜரத்னம் ஒளிப்பதிவு எல்லாவற்றுக்கும் மருந்து போடுகிறது. சேசிங் காட்சிகளும், மழைக்காட்சிகளும், அற்புதம்.

காக்கிகளின் கதை ஒரு நூறு வந்திருந்தாலும், அவற்றில் சிலவற்றைதான் ஜாக்கி வைத்து தூக்கும் மனசு. அந்த வகையில் இந்த ஆர்.கே வின் வழி, ஒன் வே அல்ல! அடுத்த ஆக்ஷன் எப்பண்ணே…?

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top