எனக்குள் ஒருவன்- விமர்சனம்-ஆஹா ஓஹோ என்று போற்றுகிற அளவுக்கு இல்லை!

நடிக்க வந்து இத்தனை வருஷமாகியும் நமக்குள் ஒருவனாக மிங்க்கிள் ஆகாமலே இருக்கிறார் சித்தார்த்! இந்த ‘எனக்குள் ஒருவன்’ அவரை நமக்குள் ஒருவன் ஆக்குகிறதா? பலத்த கேள்வியோடு நகர்கிறது நிமிஷங்கள். ஆனால் ஒரு முழு நடிகனாக தமிழ்சினிமாவின் டிக்ஷனரிக்குள் ஒருவராகியிருக்கிறார் சித்தார்த்! அப்பாவி சித்தார்த்துக்கும், அல்டாப் ஹீரோ சித்தார்த்துக்கும் நடுவே அவர் கொடுத்திருக்கும் வித்தியாசங்கள் இருக்கிறதே, ஒரு தேர்ந்த நடிகனால் மட்டுமே முடிகிற சவால் அது. வாரே… வாவ்!

தியேட்டரில் வேலை பார்க்கும் கடைநிலை ஊழியனான சித்தார்த்துக்கு, முதலாளிக்கு விசுவாசமாகவும், ஒரு பெண்ணுக்கு புருஷனாகவும் அமைய வேண்டும் என்பது சமகால கனவு. முதல் கனவு அன்றாடம் நிறைவேறிக் கொண்டிருக்கிறது. இரண்டாவது கனவுக்குதான் பெண் வேண்டும். பெண் பார்க்க போகிற இடத்தில் தீபா சன்னதி இவரது வேலையை கேட்டு பின்வாங்க, முதல் பார்வையிலேயே விழுந்தது தப்போ என்று எண்ணுகிறார் சித்தார்த். ஒரு கட்டத்தில் அவரது நல்ல உள்ளத்தை புரிந்து கொண்டு அவரை நேசிக்க ஆரம்பிக்கிறார் தீபா.

இன்னொரு பக்கம் இன்னொரு சித்தார்த். மிகப்பெரிய சினிமா ஸ்டார். எதற்கும் அலட்டிக் கொள்ளாத நிறைந்த திமிர் முகத்துடன்! அவருக்குள்ளும் ஒரு காதல். அங்கும் ஒரு தீபா சன்னதி. நடிப்பில் ஓரிடத்தை பிடிக்க வேண்டும் என்று துடிக்கும் அவருக்கும், நமக்கு மட்டுமே நல்ல மனைவியாக இருந்தால் போதும். நடிப்பு எதற்கு என்று நினைக்கிற சித்தார்த்துக்கும் நடுவில் ஏற்படுகிற மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்கும் அதன் முடிவும் இன்னொரு கதை. இரண்டையும் இணைத்து வைக்கும் அந்த லூசியா மாத்திரை என்று பலத்த முடிச்சோடு கதை நகர்வதில் அசர வைக்கிறார் இயக்குனர் பிரசாத் ராமர்.

இரண்டு சித்தார்த்துக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் கதை ஆரம்பிக்கிறது. யார் நிஜம்? யார் கனவு? என்பதை இணைக்கும் மையப்புள்ளியில் லேசாக ஜர்க் கொடுக்கவும் தவறவில்லை அவர். நாம் கனவென்று நினைத்துக் கொண்டிருக்கும் சித்தார்த்துதான் நிஜம் என்று புரியவர, அடடே… என்ன ஒரு திரைக்கதை லாவகம் என்று துள்ள வைக்கிறது அந்த நிமிஷம்.

ஜிகிர்தண்டாவில் பாபி சிம்ஹாவை வியந்ததைவிடவும் சற்றே சில தேக்கரண்டி சர்க்கரைகளை அள்ளிப்போட்டு அசரலாம் சித்தார்த்துக்காக. தன்னிடம் அறிமுகப்படுத்திக் கொள்ளும் அந்த விளம்பர பட நடிகனை வைத்துக் கொண்டு, ‘தம்பி ஒரு சேர் கொண்டு வா’ என்று உத்தரவிடுவதும், அந்த சேர் நமக்காகதான் என்று அவனும், படம் பார்க்கும் நாமும் நினைத்துக் கொண்டிருக்க, வெகு அசால்ட்டாக அதை காலுக்கு வைத்துக் கொள்கிற இடமும் அடேயப்பா… என்ன ஒரு திமிர்? அதில்தான் எத்தனையெத்த அலட்சியம்? படம் முழுக்க இந்த ஹீரோ சித்தார்த்துக்கு பிளாக் அண் வொயிட் தோற்றம்தான். (இதன் மூலம் ஏதோ சொல்ல வர்றாங்கன்னு மட்டும் புரியுது)

ஒரு பெரிய நடிகனுக்கு ஏற்படுகிற எல்லா இன்னல்களும் சித்தார்த் வாழ்வில் அரங்கேறுகிறது. அந்த பிரஸ்மீட் உட்பட! நிஜம் புரியாமல் பிரஸ் மேல் விழும் ஹீரோக்களின் மனநிலையை அப்படியே வெளிப்படுத்தியிருக்கிறார் சித்தார்த்தும்.

பீட்சா விலை அறுநூறு ரூபா. என்று சித்தார்த்திடம் சொல்லிவிட்டு, பின் அதற்காக வருந்தும் இந்த அழகி தீபா சன்னதியும், தன் லட்சியம் நடிப்புதான். அதை திருட்டுத்தனமாக கூட நிறைவேற்றி விட வேண்டும் என்று சித்தார்த்திடம் சொல்லாமலே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போய் பின்பு வருந்தோ வருந்தென வருந்தும் இந்த தீபா சன்னதியும் திரையில் வரும்போதேல்லாம் கவர்கிறார்கள்.

இன்னும் இரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கும் ஆடுகளம் நரேஷும், அலுங்காமல் குலுங்காமல் அப்ளாஸ் வாங்கிக் கொள்கிறார். ரவுடிகளுக்கு கூட மிரளாமல் தியேட்டரை தன் வசம் வைத்திருக்கும் அவர், அதை சித்தார்த்துக்கு எழுதி வைத்துவிட்டு மறைவது குலுக்கிப்போடுகிற சோகம்!

படம் நெடுகிலும் எல்லா கேரக்டரும் இப்படி அச்சடித்தாற் போல மனதில் பதிந்தாலும், கவனம் சிதறினால் கதை கந்தல் என்கிற அளவுக்கு ‘ட்வெல் பி’ சமாச்சாரமாக நகர்கிறது கதை. வேறு வழியில்லை. இதை வேறெந்த ஸ்டைலிலும் சொல்லிவிடவும் முடியாதுதான்.

கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு ஒரு பெயின்ட்டிங் போல அமர்க்களமாக இருக்கிறது. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும், பாடல்களும் இனிப்பு. சித்தார்த்தே சொந்த குரலில் பாடியிருக்கும் ‘பிரபலமாகவே…’ எவர் க்ரீன் குரலில் எவர் க்ரீன் ஹிட். ஏண்டி இப்படி… ருசி தூக்கலான போல்க்!

கன்னடத்தில் வெளிவந்து பேய் ஹிட்டடித்த லூசியா படத்தைதான் இங்கு தமிழில் மாற்றியிருக்கிறார்கள். லூஸ்யா இவங்கள்லாம்… என்று தூற்றுகிற அளவுக்கு இல்லை. ஆஹா ஓஹோ என்று போற்றுகிற அளவுக்கும் இல்லை!

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top