தேவாவை ஓடவிட்ட வாலி, வைரமுத்து!

ஆர்மோனிய பொட்டியில் நாலு கட்டையை உருவிட்டு ‘இந்தாங்க…’ என்று கொடுத்தால் கூட அதிலும் அசத்தலாக ஒரு ட்யூன் போட்டுக் கொடுப்பார் தேவா. யாழினிது, குழலினிது, தேனினிது, தேவா இனிது என்று வரிசைப்படுத்துகிற அளவுக்கு நல்ல மனுஷர். ‘கொடுக்கறதை வாங்கிக்குங்க’ என்று வற்புறுத்துகிற இசையமைப்பாளர்கள் மத்தியில், ‘கேளுங்க கொடுக்கிறேன்’ என்கிற தாராள மனசு அவருக்கு. ‘இந்த பாட்டை அந்த பாட்டுல மிக்ஸ் பண்ணி, அந்த சந்தத்தை இந்த சந்தத்துல கலந்து கொடுத்தா நல்லாயிருக்குமா?’ என்று சங்கதீம் தெரியாத தற்குறி கேட்டாலும், ‘அதுக்கென்ன ட்ரை பண்ணுவோமே?’ என்பார் மெர்க்குரி பல்பு போல முகத்தை வைத்துக் கொண்டு.

அதற்காக கலைவாணியை கள்ளத்தோணியில் சென்று சந்தித்தவரல்ல அவர். இசைஞானி இளையராஜாவின் ட்யூன் எது, தேவாவின் ட்யூன் எது என்கிற திகைப்பை ரசிகனுக்கு ஏற்படுத்தி, பல முறை தன் ட்யூனை முணுமுணுக்க வைக்கிற அளவுக்கு தேர்ந்த இசைத்தோணிதான் அவர். அதனால்தான் ரஜினி, கமல், அஜீத், விஜய் என்று அவரால் டாப் நட்சத்திரங்களை தன் வெள்ளை ஜிப்பா பைக்குள் போட்டுக் கொண்டு நடக்க முடிந்தது. வளைஞ்சு கொடுக்கறதெல்லாம் ரப்பர்னா, தேவாவும் ரப்பர்தான். தழைஞ்சு கொடுப்பதெல்லாம் நாணல் என்றால் தேவாவும் நாணல்தான். அசைஞ்சு கொடுப்பதெல்லாம் காற்று என்றால் தேவாவும் காற்றுதான். அவரிடம் பேசிக் கொண்டிருந்தால், முப்பத்திரண்டு பற்களில் முப்பதுக்கு ‘சுளுக்கு’ நிச்சயம். முப்பது வருஷ சோகத்தையும் முப்பது நிமிஷங்களில் கரைத்துவிடுகிற அற்புத மூலிகை அவரது ஹாஸ்யம்.



சினிமா ஓடுகிறதோ, இல்லையோ? கலெக்ஷ்ன் ஆகிறதோ, இல்லையோ? படம் எடுத்தவருக்கு துட்டு தேறியதோ, இல்லையோ? ஆனால் சம்பந்தப்பட்ட படங்களுக்கும் படத்தில் நடித்தவர்களுக்கும் ஜனவரி ஒண்ணாந்தேதி அன்று ஒரு சடங்கு இருக்கும். அந்த பைன் ஆர்ட்ஸ். இந்த பைன் ஆர்ட்ஸ். அந்த நிறுவனம் இந்த நிறுவனம் என்று சுமார் ஒரு டசன் அமைப்புகள் போட்டி போட்டுக் கொண்டு விருதுகள் கொடுப்பார்கள். மொத்தமா போட்டாக் கூட நாலு பேரீச்சம் பழத்துக்கு உதவாத அந்த விருதுகளை வழங்க, இன்விடேஷன் என்ன? மாலைகள் என்ன? சால்வைகள் என்ன? என்ட்ரி பாஸ் என்ன? என்று அமர்க்களப்படுத்துவார்கள். அதுபோன்ற நேரங்களில் ‘தேவா எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்’ என்று அள்ளிக் கொண்டு போக ஒரு குரூப் தயாராக இருக்கும். ‘பழகுனவங்க கூப்பிடுறாங்க. போகலேன்னா மனசு கஷ்டப்படுவாங்க’ என்பதற்காகவே இஷ்டப்பட்டு கிளம்புவார் தேவாவும்.

அப்படி போன இடத்தில்தான் சமுதாயத்தில் பெரிய அந்தஸ்திலிருக்கும் ஒருவர் தேவாவின் மனசை இன்னும் நோகடித்து அனுப்பினார். சோசியத்துல அனுகூல சத்ரு என்றொரு பதம் உண்டு. ‘சொந்த வீட்ல இருக்காரு. ஆனாலும் வீட்டை சேதப்படுத்தாம போக மாட்டாரு’ என்பார்கள் சில கிரகங்களை. அப்படியொரு கிரகம் தேவாவையும் பிடித்து ஆட்டியது ஒரு விழாவில்.

இதுபோன்ற மேதைகளும் அறிஞர்களும் கலந்துக்கிற விழான்னா ஆர்வமா போவார் தேவா. அவங்க அனுபவத்தை அங்க சொல்வாங்க. அதுல ஏதாவது ஒரு விஷயம் நமக்கு உந்துதலா இருக்கும்ல. அதுக்காகதான் நான் மறுக்காம போற வழக்கத்தை வச்சுருக்கேன் என்பார்.

ஒருமுறை அப்படி போனப்பதான், ஒரு அறிஞர் தேவாவை புகழ்ந்து பேச எழுந்தார். ‘தேவா இருக்காரே… அற்புதமான மியூசிக் டைரக்டர். அவர் பாட்டெல்லாம் இளைஞர்கள் மத்தியில் தேசிய கீதம். ஒரு படத்துல அவர் ஒரு பாட்டு போட்ருப்பாரு பாருங்க. அடடா…’ன்னு சொல்லிட்டு பாடவே ஆரம்பித்துவிட்டார். அவரு தொண்டையை செருமிகிட்டு பாட ஆரம்பிக்கும்போதே என்ன பாட்டா இருக்கும்னு ஆர்வமா காதை தீட்டிகிட்டு கேட்க தயாராகிவிட்டார் தேவா. அந்த கொடுமைய ஏன் கேட்கிறீங்க? இசைஞானி இளையராஜா இசையமைச்ச சூப்பர் ஹிட் பாட்டான ‘என்னை தாலாட்ட வருவாளா’ன்னு பாட ஆரம்பிச்சுட்டாரு. ஜனங்களும் புரியாம பயங்கரமா கை தட்டுறாங்க. தேவாவுக்கு கை காலலெல்லாம் உதற ஆரம்பிச்சுருச்சு’.

உடனே ‘அது நான் இசையமைச்ச பாட்டு இல்லே’ன்னு சொல்ல நினைச்சு எழுந்துவிட்டார். அவரு விட்டால்தானே? ‘சார்… உட்காருங்க. என்ன சொல்ல வருவீங்கன்னு எனக்கு தெரியும். அது என்னோட பாட்டு இல்லேன்னு சொல்வீங்க. அவ்வளவுதானே? அவர் இசையமைச்ச பாட்டை கூட என்னுது இல்ல. எல்லாம் கலைவாணி சரஸ்வதி கொடுத்தது’ன்னு சொல்லிடுவாரு. அந்தளவுக்கு தன்னடக்கம். அதான் தேவா சார்’ என்றார்.

இன்னொரு பாட்டு கேளுங்க. என்று அவர் இன்னொரு பாட்டை பாட்டை எடுத்துவிடுறார். கடவுளே… அதுவும் தேவா பாட்டு இல்ல. மறுக்கறதுக்காக இவர் எழும் போதெல்லாம், சும்மா உட்காருங்க சார்… போதும் உங்க தன்னடக்கம்’ என்று அடக்கி அடக்கியே நெருக்கி தள்ளினார் . இப்படி வரிசையா நாலு பாட்டு பாடுனாரு. நாலும் தேவாவுடையது இல்ல.

இந்த தர்ம சங்கட அனுபவத்தை நீங்க தேவாவே சொல்லி கேட்க வேண்டும்! அதுதான் தேவானுபவம்!

தி.நகரில் பெரிய பங்களா. சொந்தமாக பிரமாண்டமான ஸ்டூடியோ. படகு கார் என்றெல்லாம் தேவா, ‘ராஜ’தேவாவாக இருந்தாலும், பழசை மறக்கிற வழக்கம் அவருக்கு இல்லை. இளம் வயது கஷ்டங்களை அவருக்கேயுரிய நகைச்சுவையோடு அவர் சொன்னால், ஒரு முறை காலச் சக்கரத்தில் ஏறி அவரோடு ட்ரிப் அடித்த சுகம் கிடைக்கும்.

நான் துர்தர்ஷன்ல வேலை பார்த்துகிட்டு இருந்த நேரம். மைலாப்பூர்ல இருந்து சேப்பாக்கத்துக்கு ஒரு ஓல்டு ஸ்கூட்டர்லதான் போவேன். தினமும் பதினாறு ரூபாய்க்கு பெட்ரோல் போடுவேன். அப்ப ஒரு லிட்டர் ரேட் அதுதான். அதுக்கு மேல காசும் இருக்காது. தினமும் பதினாறுக்கு மேல போட்டதில்ல என்பதால், என்னை பார்த்தாலே பங்க் பசங்க, ‘டேய்… பதினார்ரூவா வருதுரா’ன்னு கிண்டல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு அவமானம் புடுங்கி திங்கும். ஒரு நாளாவது அஞ்சு லிட்டர் பெட்ரோலை மொத்தமா போட்டு இவனுங்க மூக்கை உடைக்கணும்னு ஆத்திரமா வரும். ஆனால் பொருளாதாரம் பூதாகாரமா இருக்கும். முடியாது.

பொறுத்து பொறுத்து பார்த்துட்டு ஒரு தடவ 500 ரூபா கடன் வாங்கிட்டு கௌம்பிட்டேன். பங்க்ல நுழையும்போதே ‘டேய்… பதினார்ரூவாடா’ன்னா ஒருத்தன். இருடி இரு… இன்னைக்கு இருக்கு உன் மூக்குக்கு பிளாஸ்த்ரின்னு நினைச்சுகிட்டு ஸ்டைலா வண்டிய நிறுத்துனேன். அவன் பட்டனை அழுத்துறதுக்கு முன்னாடியே ‘தம்பி… டேங்க்கை ஃபில் பண்ணு’ன்னு சொல்லிட்டு அவன் முகத்தை பார்க்குறேன்… பய அசந்துட்டான். இருந்தாலும், ‘சார் வேணாம் சார். வழக்கமா என்ன போடுவீங்களோ, அதை மட்டும் போடுங்க’ன்றான். ‘இல்லப்பா. காசு இருக்கு. ந்தா பாரு’ என்று 500 ரூபாயை எடுத்து நீட்டுறேன். அவன் விட்றதா இல்ல. ‘வேணாம் சார். சொன்னா கேளுங்க’ன்றான்.

‘தம்பி… நான்தான் பணம் இருக்குன்னு சொல்றேன்ல? நீ தைரியமா போடு’ன்னு நான் பிடிவாதம் பண்றேன். அந்த தம்பி ஒரு பதிலை சொல்லுச்சு பாருங்க. நான் துடிச்சு போயிட்டேன்.

‘சார்… வருஷக்கணக்கா பதினாறு ரூபாயை தாண்டி நீங்க பெட்ரோல் போட்டதேயில்ல. டேங்க்ல அந்த அளவுக்கு மேல இருக்குற இடமெல்லாம் துரு பிடிச்சு போயிருக்கும். இப்ப பெட்ரோலை ஃபுல்லா போட்டா அந்த துருவெல்லாம் அப்படியே ட்யூப் வழியா கார்ப்பரேட்டருக்கு போய் அடைச்சுரும். அதுக்காகதான் சொல்றேன். வேணாம்’னான். அடப்பாவி… ஒரு மனுஷனை கேவலப்படுத்த எப்படியெல்லாம் ட்யூஷன் படிச்சுட்டு வர்றானுங்கன்னு நினைச்சு நான் ஆடிப்போயிட்டேன்!



தேவா என்கிற சமாதானப்புறா, ‘புறா ஃபிரை’ ஆன கதை ஒன்றும் இருக்கிறது. அது ஹன்ட்ரண்ட் பர்சென்ட் சிரிப்பு.

வாலியும் வைரமுத்துவும் அவரது இசைக்கு பாட்டு எழுதியிருக்கிறார்கள். ஆனால் இவருக்கு தெரியாமல் அவரையும், அவருக்கு தெரியாமல் இவரையும் எழுத வைப்பாராம். ஏன்? ரெண்டு பேருக்குமே மயிரிழை அளவுக்கு ஈகோ ஓடிய காலம் அது. வைரமுத்துவை காலையில் வரச்சொல்லிவிட்டார் தேவா. அவரும் வந்து விட்டார். முதல் மாடியில் கம்போசிங். பாட்டும் ட்யூனும், பன்னும் டீயும்போல மிக்ஸ் ஆகுற நேரத்தில்தான், தேவாவை வெக்ஸ் ஆக்குகிற செய்தி வந்தது. அவரது உதவியாளர் அப்படியே நைசாக வந்து தேவாவின் காதில் கிசுகிசுத்தார். சார்…. கீழே வாலி சார் வந்துருக்காரு. வரச்சொன்னீங்களாமே?

‘அவரை மதியானம்ல வரச்சொன்னோம். இதுவேற வம்பாப் போச்சே’ என்று மிரண்ட தேவா, முன்னால் அமர்ந்திருக்கும் வைரமுத்துவிடம், ‘சார்… நீங்க எழுதிகிட்டேயிருங்க. லேசா வயித்துல வலியிருக்கு. ந்தா வந்துர்றேன் என்று வாசல் வரைக்கும் கேஷுவலாக நடந்துபோய்… அப்புறம் வீறு கொண்டு ஓட ஆரம்பித்தார் கீழே. ‘ஐயா… வாங்க வாங்க. ட்யூன் போட்டுடலாமா?’ என்று கேட்டுக் கொண்டே கீழே தயாராக இருந்த இன்னொரு கீ போர்டில் ட்யூன் போட ஆரம்பித்துவிட்டார். சரியாக ஐந்து நிமிடம். அவர் வரிகளை கோர்க்க ஆரம்பித்த நேரத்தில், ‘ஐயா… எழுதிகிட்டேயிருங்க. நேத்து சாப்பிட்ட சப்பாத்தி ஒத்துக்கல. வந்துர்றேன்’ என்று வாசல் வரைக்கும் அதே நிதான நடை நடந்து அதற்கப்புறம் திடுதிடுவென ஓட ஆரம்பித்தார் மாடிக்கு. அங்கே வரிகளை முடித்திருந்தார் வைரமுத்து.

இப்படி மாறி மாறி ஓடி ஓடியே ஒரே நேரத்தில் இரண்டு பாடல்களை எழுத வைத்து இருவரையும் சந்திக்க விடாமலே அனுப்பிய சாமர்த்தியம் இப்போதுள்ள எந்த இசையமைப்பாளருக்கும் வராது.

தேவாவின் கதைகளை கேட்டால், அது அவரது பாடல்களை விடவும் இனிப்பாக இருக்கும். இசையால் மட்டுமல்ல, குணத்தாலும் அவர் தேனிசைத்தென்றல்தான்!

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top