மாசு என்கிற மாசிலாமணி - ஆவி-பேய் படங்களின் லாஜிக்கு எல்லாம் பார்க்க கூடாது

ஆவி, பேய் படங்களுக்கு தான் தற்போது மாஸ் என்பதால் அதுமாதிரி ஆவிக்கதையை நம்பி இருக்கின்றனர் நாயகர் சூர்யாவும், இயக்குநர் வெங்கட்பிரபுவும்.

ஆனால் மற்ற ஆவி மற்றும் பேய் படங்களில் இருந்து மாசு, வித்தியாசப்பட்டும், கொஞ்சம் அந்நியப்பட்டும் தெரிய காரணம்., மற்ற பேய் படங்களில் ஆவி, பேய் உள்ளிட்டவைகள் மனிதர்களை பயமுறுத்தும் அல்லது தங்கள் மனதுக்கு பிடித்தவர்களுக்கு உதவும்... மாசு படத்தில் ஆவி மற்றும் பேய்களுக்கு நாயகர் சூர்யாவின் உதவி தேவைப்படுவதும், அகால மரணம் அடைந்த மனிதர்களுடைய ஆவிகளின் நிறைவேறாத ஆசைகளை, சூர்யா சிரம் மேற்கொண்டு நிறைவேற்றி வைப்பதும், அதில் வில்லன்களால் சிதைக்கப்பட்ட சூர்யாவின் தாய்-தந்தை உள்ளிட்ட குடும்ப ஆவிகளின் நிராசைகளும் நிறைவேற்றி வைக்கப்படுவதும், மாசு சூர்யாவின் அப்பா ஆவியாக, கனடா வாழ் ஈழத்தமிழராக சக்தி பாத்திரத்திலும், கோட் - சூட் சகிதம் ஸ்டைலான குடும்பி கெட்டப்பில் சூர்யாவே டபுள் ஆக்ட்டில் சூர்யாவே ஜொலித்திருப்பதும் தான் மாசு என்கிற மாசிலாமணி படத்தின் கவர்ந்திழுக்கத்தக்க கரு, கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம்!

கதைப்படி, ஆனாதையாக மாசு என்கிற மாசிலாமணி சூர்யாவும், ஜெட் என்கிற பிரேம்ஜி அமரனும் குழந்தை பருவம் தொட்டே உயிர் தோழர்கள். சட்டத்திற்கு புறம்பாக சம்பாதித்தவர்களிடம் போலீஸ், விஜி லென்ஸ், கஸ்டம்ஸ் அதிகாரிகள் வேஷமிட்டு பணத்தை அபகரிக்கும் இருவரும் இதுமாதிரி சம்பவம் ஒன்றில் ஈடுபட்டு பாதிக்கப்பட்ட தாதாவின் ஆட்களால் துரத்தப்படும் போது விபத்து ஒன்றில் சிக்குகின்றனர்.

தகுந்த சிகிச்சைக்கு பின் உயிர் பிழைக்கும் மாசு சூர்யாவுக்கு ஒரு அபூர்வ சக்தி கிடைக்கிறது. அதன்படி நிறைவேறாத ஆசைகளுடன் இறந்து போன மானூட பிறவிகள், அவர் கண்முன் தோன்றுகின்றனர். அவர்களின் நிராசைகளை சூர்யா நிறைவேற்றி வைக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. அவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும் சூர்யா, அதற்கு கைமாறாக தன் பணத்தேவைகளை பூர்த்தி செய்ய, குறிப்பாக தன் காதலி நயன்தாராவுக்கு உடனடியாக தேவைப்படும் ரூ.3.50 லட்சம் பணத்திற்காக தன்னை நாடிவரும் ஆவிகளை, பேய்களை விட்டு, சில பேராசை பிடித்த சில மனிதர்களின் வீட்டில் பயமுறுத்த வைத்து அங்கு பேய் ஓட்டுகிறேன் பேர் வழியென லட்சம் லட்சம் காசு பார்க்க களம் இறங்குகிறார்.

ஒரு வீட்டிற்குள் ஒரு ஆவி சூர்யாவிற்கு கட்டுப்படாமல் கட்டவிழ்ந்து நிற்கிறது. அது யார்.? அதனுடன் சூர்யாவிற்கு உள்ள உறவு என்ன.? சூர்யாவின் சாயலிலேயே இருக்கும் அதன் நிறைவேறாத ஆசைகள் என்னென்ன.? அவற்றையெல்லாம் எவ்வாறு தீர்த்து வைத்திருக்கிறார் எனும் கேள்வியுடன் மாசு சூர்யா, அநாதையாக்கப்பட்ட பின்புலமும் தெரிய வருகிறது. அதன்பின் சூர்யாவின் ஆக்ரோஷமும், அவர் உதவும் பிரேம்ஜி உள்ளிட்ட பேய்களின் காமெடி பித்தலாட்டமும் தான் மாசு படம் மொத்தமும்.

சூர்யா, மாசு என்கிற மாசிலாமணியாகவும், ஆவி அப்பா சக்தியாகவும் இருவேறு பரிமாணங்களில் தோன்றி நடித்து தன் ரசிகர்களை மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களையும் திருப்திப்படுத்தியிருக்கிறார். புரியாத புதிராக அப்பா ஆவி சக்தியும், மகன் மாசுவும் மோதிக் கொள்ளும் காட்சிகளிலும், தன் அப்பா தான் சக்தி ஆவி எனும் உண்மை தெரிந்ததும் வரும் காட்சிகளிலும் சூர்யா உருக வைக்கிறார். பிரேம்ஜியுடன் அவர் பண்ணும் காமெடி கலாட்டாக்களும் கலர்புல்.

நயன்தாரா, பிரணிதா உள்ளிட்ட இரு நாயகியரில், மகன் சூர்யாவுக்கு ஜோடியான நயன்தாராவுக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்படாததால், அப்பா சூர்யாவுக்கு ஜோடியான பிரணிதா பியித்து பெடலெடுத்திருக்கிறார்.

வழக்கம் போலவே, வெங்கட் பிரபுவின் காமெடி ஸ்பெஷலான பிரேம்ஜி அமரன், தன் கெக்கே பெக்கே சிரிப்புகளால் ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார்.

வில்லனாக சமுத்திரகனி, ஸ்ரீமன், பிரம்மானந்தம், சரத் லொகித்ஸ்வா, அருணாச்சலம், பார்த்திபன், கருணாஸ், சுபு பஞ்சு, அரவிந்த் ஆகாஷ், ரியாஸ் கான், வி.ஜே.ரம்யா, ரித்திகா ஸ்ரீனிவாஸ், சஞ்சய் பாரதி உள்ளிட்ட எல்லோரும் திறமை அணிந்து பக்காவாக பளிச்சிட்டிருக்கின்றனர்.

ஆர்.டி.ராஜசேகரின் ஔிப்பதிவு, யுவன் ஷங்கர் ராஜாவின் இசை, கங்கை அமரன்-மதன் கார்க்கியின் பாடல் வரிகள், பிரவின்.கே.யின் படத்தொகுப்பு, ராஜீவ்வின் கலை இயக்கம், சில்வாவின் சண்டை பயிற்சி உள்ளிட்ட பிளஸ் பாயிண்ட்டுகளுடன்.. வெங்கட் பிரபுவின் எழுத்து-இயக்கத்தில், ஆங்காங்கே தெறிக்கும் பழைய பட சிச்சுவேஷன்கள், செண்டிமென்ட் சீன்கள், காமெடி கண்ணாமூச்சிகள் உள்ளிட்டவைகள் மாசுவின் ஹைலைட்!

ஆங்காங்கே ஒருசில லாஜிக் மிஸ்டேக்குகள் தெரிந்ததாலும், ஆவி-பேய் படங்களின் அந்த லாஜிக்கு எல்லாம் பார்க்க கூடாது என்பதால் மாசு - ஹைகிளாசு!

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top