போச்சு போச்சு... எல்லாம் போச்சு! - பட விழாவில் புலம்பிய சிம்பு

கடந்த இரண்டரை ஆண்டுகளில் படம், பணம், காதலி என சகலத்தையும் இழந்து விட்டேன். என் வாழ்க்கையில் எல்லாமே போய் விட்டது, என்றார் நடிகர் சிம்பு.

நடிகர் சந்தானம் தயாரித்து ஹீரோவாக நடித்துள்ள ‘இனிமே இப்படித்தான்' படத்தின் ‘டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில்தான் இப்படி உருக்கமாகப் பேசினார் சிம்பு.

நான்தான் அறிமுகம் செய்தேன்

சத்யம் தியேட்டரில் நடந்த இந்த விழாவில் சிம்பு பேசுகையில், ‘‘மன்மதன் படத்தில் நான்தான் சந்தானத்தை அறிமுகப்படுத்தினேன். அவர் இவ்வளவு பெரிய உயரத்துக்கு போவதற்கு அவருடைய திறமைதான் காரணம். எனக்கு திறமையே கிடையாது. அதை உருவாக்கி கொடுத்தவர், எங்க அப்பா. இங்கு நான் நிற்பதற்கு காரணம், அவர்தான்.

தட்டிவிடத்தான் ஆளிருக்கு...

தட்டி விடுவதற்கு இங்கு நிறைய பேர் இருக்கிறார்கள். தட்டிக்கொடுப்பதற்கு இங்கு சில பேர்தான் இருக்கிறார்கள். என் படங்கள் வெளியாகி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. இந்த இரண்டரை ஆண்டுகளில், நிறைய விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன்.

பிகரைத் தேடிப் போகவில்லையே...

நிறைய பேர் நான் ஆன்மிகத்தில் போய் விட்டேன் என்று சொல்கிறார்கள். கடவுளைத் தேடித்தானே போனேன். ‘பிகரை' தேடிப்போகவில்லையே. என்னை கஷ்டம் இல்லாமல் வளர்ந்தவன் என்று அனைவரும் சொல்வார்கள். சாதாரண மனிதனின் கஷ்டம் எப்படி இருக்கும்? என்பதை இந்த இரண்டரை வருடம் கற்றுக்கொடுத்தது.

படம், பணம், காதலி மூணும் போச்சு..

கடந்த இரண்டரை வருடங்களில் என்னை விட்டு எல்லாமே போய் விட்டது. நான் சம்பாதிக்கிற பணத்தை எல்லாம் அம்மாவிடம் கொண்டு போய்தான் கொடுப்பேன். இப்போது, செலவுக்கு அம்மாவிடம் போய் காசு கேட்க கஷ்டமாக இருக்கிறது.

கல்யாணமும் நடக்கலியே...

என்னை விட்டுப் படம் போய் விட்டது. பணமும் போய் விட்டது. சரி, நமக்காக ஒரு பெண் இருக்கிறாள். கடைசிவரை அந்த காதலி நம்முடன் இருப்பாள் என்று நினைத்தேன். அவளும் போய் விட்டாள். கல்யாணமாகி குழந்தை பிறந்து அதன் சிரிப்பை பார்த்தாவது கஷ்டம் போய்விடும் என்று நினைத்தேன். அதுவும் இல்லாமல், கடவுள் என்னை சோதித்து விட்டார்.

உயிர் இருக்கே...

எல்லாமே என்னை விட்டு போய் விட்டாலும், உயிர் மட்டும் என்னிடம் இருக்கிறது. ஏதோ ஒரு காரணத்துக்காக இந்த உயிர் இருக்கிறது. இத்தனை கஷ்டங்களை நான் கடப்பதற்கு என் ரசிகர்கள் உடன் இருக்கிறார்கள். ஊடக நண்பர்கள் உதவியாக இருக்கிறார்கள்.

மீண்டும் அப்பா துணை

மே 9-ந் தேதி வெளியாக இருந்த ‘வாலு' படம் வெளியாகவில்லை. என்னடா இது, கடவுள் நம்மை கைவிட்டு விட்டாரே என்று நினைத்தேன். இப்போது அந்த படத்தை என் அப்பா வாங்கி வெளியிட இருக்கிறார். நமக்காக வாழ்வதை விட, நாம் மற்றவர்களுக்காக வாழ்ந்தால் நன்றாக இருப்போம் என்பதை கடந்த இரண்டரை வருடங்களில் கற்றுக்கொண்டேன்," என்றார்.

ஆர்யா

விழாவில் நடிகர்கள் ஆர்யா, உதயநிதி ஸ்டாலின், சந்தானம், டைரக்டர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், ராஜேஷ் எம், படத்தின் இயக்குநர் முருகானந்த், இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி ஆகியோரும் பேசினார்கள்.

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top