ஹீரோக்களாக மாறிய குணச்சித்திர நடிகர்கள்

சினிமா தொடங்கிய காலத்தில் இருந்தே குணச்சித்திர நடிகர்கள் பலர், ஹீரோவாக நடித்து வெற்றி பெற்றிருக்கின்றனர்.இன்றைய காலத்தில், சில படங்களில் மட்டுமே குணச்சித்திர வேடம் ஏற்று நடித்தவர்கள், திடீரென்று ஹீரோவாக பவனி வர ஆரம்பித்துள்ளனர்.

‘ஸாரி... எனக்கு கல்யாணமாயிடுச்சி’ படத்தில், குணச்சித்திர நடிகர் ஸ்ரீ மன் ஹீரோவாக நடித்தார். ‘விலாசம்’ உட்பட நிறைய படங்களில் கதையின் நாயகனாக நடித்தார் பவன். ஆரம்ப காலத்தில் சின்னச்சின்ன வேடங்களில் நடித்த விஜய் சேதுபதி, குறிப்பிட்ட சில படங்களில் குணச்சித்திர வேடம் ஏற்றிருந்தார்.

‘தென்மேற்குப் பருவக்காற்று’ அவரை கதையின் நாயகனாக்கி, பிறகு வந்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படம் கமர்சியல் ஹீரோவாக்கி விட்டது. இந்த லிஸ்ட்டில் பாபி சிம்ஹா சேர்கிறார்.

‘சூது கவ்வும்’, ‘ஜிகிர்தண்டா’, ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ உட்பட பல படங்களில் குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தி  தேசிய விருதும் பெற்றார். தற்போது ‘உறுமீன்’, ‘பாம்பு சட்டை’, ‘மசாலா படம்’, ‘கோ 2’, ‘வல்லவனுக்கும் வல்லவன்’ படங்களில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

‘பெங்களூர் டேஸ்’ ரீமேக்கில், ஆர்யா, ராணாவுடன் நடிக்கிறார். ‘இறைவி’ படத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து நடிக்கிறார்.

 ‘மெட்ராஸ்’ படத்தில் நடித்த கலையரசன், ‘காலக்கூத்து’ படத்தில் ஹீரோவாகி விட்டார். பல படங்களில் சின்னச்சின்ன வேடங்களில் நடித்த தினேஷ், ‘அட்ட கத்தி’ மூலம் கதையின் நாயகனாக மாறினார்.

தம்பி ராமையா, ‘உ’ படத்தில் கதையின் நாயகனாக நடித்தார். இதுபோல் பல படங்களில் குணச்சித்திர நடிப்பை வழங்கிய அப்புக்குட்டி, ‘அழகர்சாமியின் குதிரை’  படத்தில் ஹீரோவாகி தேசிய விருதும் வாங்கினார். பிறகு ‘மன்னாரு’ படத்தில் ஹீரோவானார்.

 ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ அஸ்வின், ‘பில்லா’ ரீமேக் உட்பட ஓரிரு படங்களில் நடித்த அசோக் செல்வன் ஆகியோரும் ஹீரோவாகி விட்டார்கள். இதில் அசோக் செல்வன் ‘பீட்சா 2-வில்லா’, ‘தெகிடி’ படங்களில் ஹீரோவானார்.
கருணாகரன் கதையும் இதுதான். நிறைய படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்த அவர், ‘ஆடாம ஜெயிச்சோமடா’ படத்தை தொடர்ந்து ‘உப்புகருவாடு’ படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார்.

‘குணச்சித்திர நடிகர்கள் ஹீரோக்களாக மாறுவதால், நல்ல கதைகள் ரசிகர்களுக்கு கிடைப்பது மட்டுமின்றி, ஹீரோயிசம் இல்லாத யதார்த்தமான படங்களைப் பார்த்து ரசிக்க முடிகிறது. திரையுலகில் இது ஆரோக்கியமான வளர்ச்சிதான்’ என்கிறார், மூத்த இயக்குனர் ஒருவர்.

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top