புறம்போக்கு - பேனா வாங்கிக்கொடுத்த குற்றத்துக்கு சிறை அனுபவிக்கிறார் பேரரறிவாளன்

வெறும் பொழுது போக்கான வணிக சினிமாக்களை எடுக்காமல் சினிமாவுக்குள் சமுதாய நலன் சார்ந்த கருத்துக்களை வைத்து படம் இயக்கும் இயக்குநர் எஸ்பி ஜனநாதனின் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது புறம்போக்கு என்கிற பொதுவுடமை. இந்தப் படமும் அவர் பாணியில் ஆனால் சற்றே அதிகமாக கம்யூனிச சித்தாத்தங்களை பேசுகிறது.

பாலுச்சாமி (ஆர்யா) தூக்குத் தண்டனை கைதி. அவரை தப்பிக்க வைக்க அவரது இயக்கத்தைச் சார்ந்த குயிலி (கார்த்திகா) முயற்சிக்கிறாள். இதற்கு பாலுச்சாமியை தூக்கு போட நியமிக்கப்பட்டவரான எமலிங்கமும் (விஜய் சேதுபதி) உதவி செய்கிறார். ஆனால் பாலுச்சாமியை தூக்கில் போட்டே தீருவது என்கிற லட்சியத்துடன் இருக்கிறார் சிறைச்சாலை அதிகாரியான மெக்காலே. இவர்கள் நால்வருக்குள் நடக்கும் ஆட்டம்தான் புறம்போக்கு என்கிற பொதுவுடமை.

பல நாடுகளின் அணு ஆயுதக் குப்பைகள் இந்தியாவில் கொட்டப்படுகின்றன என்பதை உள்ளடக்கிய காட்சிகளுடன் படம் துவங்குகிறது. காட்சிக்கு காட்சி படம் கம்யூனிச சித்தாந்தங்களைப் பேசுவதுடன் நுண்ணிய அரசியலையும் பேசுகிறது. தூக்குத் தண்டனைக்கு எதிரான பல கருத்துக்களை படம் சொல்லிப் போகிறது.

மக்களுக்காக… புரட்சி… போராட்டம்… என்று இயங்கும் இயக்கத்திற்காக களப்பணியாற்றும் பாலுச்சாமி கதாபாத்திரத்தில் வருகிறார் ஆர்யா. பசியால் வாடும் மக்களுக்காக, உணவுப் பொருள்களை எடுத்துச் செல்லும் ரயிலை கடத்துகிறார், இந்தியாவை ஆயுதக் குப்பையாக்கும் அரசைக் கண்டித்து ராணுவத்தில் தற்கொலை படைத் தாக்குதல் நடத்த முயற்சிக்கிறார். இந்த காரணங்களால் பாலுச்சாமியை கைது செய்து விசாரணை நடத்துகிறார்கள். அவருக்கு தூக்குத் தண்டனை வழங்குவது என்று தீர்ப்பு வருகிறது. தூக்கு தண்டனையை நிறைவேற்ற சென்னை மத்திய சிறைச்சாலைக்கு பாலுச்சாமியை அழைத்து வருகிறார்கள். படத்தின் பெரும்பாலான காட்சிகள் இந்த சிறைச்சாலையில்தான் நடக்கின்றன. தூக்குத் தண்டனை கைதியான பாலுச்சாமி கேரக்டருக்கு ரொம்பவே பொருந்தியிருக்கிறார் ஆர்யா.

எமலிங்கம் கேரக்டரில் விஜய் சேதுபதி. ஏற்கனவே ஒருத்தரை தூக்கில் போட்டு சில வருடங்கள் சித்த பிரம்மை பிடித்தவர் போன்று அலைந்து திரிந்த எமலிங்கம் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் தான் பாலுச்சாமியை தூக்கில் போட சிறைத்துறையில் இருந்து வற்புறுத்துகிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்க எமலிங்கம் ரொம்பவே போராட வேண்டியிருக்கிறது. ஆனால் அவர்கள் தப்ப விட்டால்தானே… எந்த கேரக்டராக இருந்தாலும் அசால்ட் காட்டும் விஜய் சேதுபதி இந்த கேரக்டரையும் அல்வா போன்று விழுங்கிவிட்டு நடித்திருக்கிறார்.

பாலுச்சாமியை தூக்கில் போட்டே தீருவது என்கிற லட்சியத்துடன் வலம் வரும் சிறைச்சாலை அதிகாரியாக ஷாம். கேரக்டரின் காரணமாக படம் முழுக்க மருந்துக்கு கூட ஒரு இடத்தில் கூட சிரிக்காமலேயே வருகிறார். படத்தின் இறுதியில் பாலுச்சாமியை எப்படியாவது தூக்கில் ஏற்றிவிட இவர் போடும் மாஸ்டர் பிளான் தொடர்பான காட்சிகள் அடுத்து என்ன நடக்குமோ என்கிற எதிர்பார்ப்பை சற்றே திகிலுடன் உருவாக்கிவிட்டிருக்கின்றன.

பாலுச்சாமியின் இயக்கத்தின் சக தோழராக குயிலி கதாபாத்திரத்தில் வருகிறார் கார்த்திகா. பாலுச்சாமியை காப்பாற்ற படம் முழுக்க திட்டம் தீட்டுகிறார். இந்த திட்டத்திற்கு எமலிங்கத்தை ஒத்துழைக்க வைக்கிறார்.

படத்தின் முக்கியமான இந்த கேரக்டர்களைத் தவிர போலீஸ்காரர் செல்லபாண்டியாக வரும் கிருஷ்ணமூர்த்தி, எமலிங்கத்தின் அம்மாவாக நடிதிருக்கும் ரமா, கார்த்திகாவுடன் இயக்கத் தோழராக வருபவர்கள் என அத்தனை பேரும் நினைவில் நிற்கிறார்கள்.

படத்தின் வசனங்களில் மட்டுமல்லாது பாடல் வரிகளிலும் கூட சாட்டையை சுழற்றியிருக்கிறார்கள். ரயில் நிலையத்தில் விஜய் சேதுபதி ஆடிப் பாடும் பாடல் வரிகளில் ‘நாட்டைக் காக்க உயிரைக் குடுறா…’ என்று டாஸ்மாக்கையும் குடிகாரர்களையும் வெளுத்து வாங்கியிருக்கிறார்கள். பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் வர்ஷன். இரண்டு பாடல்கள் ரசிக்கிற ரகம். பின்னணி இசை ஸ்ரீகாந்த். படம் முழுக்க… சிறை சம்பந்தப்பட்ட காட்சிகளில் இன்னும் கூடுதலாக பின்னணி இசையில் வெளுத்துவாங்கியிருக்கிறார் ஸ்ரீகாந்த்.

இமை மூடித் திறப்பதற்குள் 100 ஷாட்கள் கடந்திருந்தால்தான் விறுவிறுப்பான எடிட்டிங் என்று இல்லாமல் ஒவ்வொரு காட்சியையும் நின்று நிதானமாக மனதில் தங்குகிற வண்ணம் தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் கணேஷ்குமார். என்கே ஏகாம்பரம் ஒளிப்பதிவும் டிஐ கலரிஸ்டும் சேர்ந்து படத்தை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு போயிருக்கிறார்கள். சிறைச்சாலையை செட் போட்டு உருவாக்கியிருக்கிறார் கலை இயக்குநர் செல்வகுமார். ஆச்சரியப்பட வைக்கிறது சிறைச்சாலையின் உருவாக்கம்.

படத்தை இயக்கியிருக்கிறார் ஜனநாதன். படம் முழுக்க தூக்குத் தண்டனை, கம்யூனிசம் தொடங்கி பல விஷயங்களை பேசுகிறது படம். பேனா வாங்கிக்கொடுத்த குற்றத்துக்காக சிறை தண்டனை அனுபவிக்கிறார் என்று பேரரறிவாளன் விஷயத்தை கொஞ்சம் தொட்டு சொல்கிறார் இயக்குனர். போலீஸ் அதிகாரிகளின் நிர்பந்தம் காரணமாக பொய் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டு பல ஆண்டுகள் கைதியாக இருக்கும் அப்பாவிகள், தூக்கில் போடும் நபரின் எண்ணங்கள்… என படம் முழுக்க பரவிக் கிடக்கின்றன ஆயிரம் ஆயிரம் விஷயங்கள்.

புறம்போக்கு என்கிற பொதுவுடமை – லால் சலாம்.

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top