ஐவராட்டம் - திரை விமர்சனம்..!,

சிவகங்கை மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் ஐந்து பேரை மட்டும் வைத்து நடக்கும் கால்பந்தாட்டத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் ஐவராட்டம்.

சிவகங்கை மாவட்டத்தில் சொந்தமாக கால்பந்து அணி ஒன்றை நடத்தி வருகிறார் ஜெயப்பிரகாஷ். சீனியர்-ஜூனியர் என்று இரு பிரிவாக இருக்கும் அந்த அணியில் சீனியர் அணிக்கு நிரஞ்சன் ஜெயப்பிரகாஷும், ஜுனியர் அணிக்கு அவரது தம்பியான துஷ்யந்த் ஜெயப்பிரகாஷும் கேப்டனாக இருக்கிறார்கள்.

அண்ணன் தம்பியாக இருந்தாலும், இருவரும் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இதனால் இரண்டு அணிகளுக்கும் போட்டி நடக்கிறது. இதில் யார் தோற்கிறார்களோ அவர்கள் மைதானத்தில் விளையாட மாட்டோம் என்று சபதத்தோடு களமிறங்குகின்றனர். இதில் ஜூனியர் அணி தோற்கிறது.

இது ஒருபுறம் இருக்க, ஜெயப்பிரகாஷின் இன்னொரு தம்பியான அம்ருத்கலாம் வேறொரு ஜாதிப் பெண்ணை திருமணம் கொண்டதால் அவரை குடும்பத்தில் இருந்து ஒதுக்கி வைப்பதுடன், அவரிடம் இருந்த கால்பந்தாட்ட அணியையும் பறித்து கொள்கிறார் ஜெயப்பிரகாஷ்.

தற்போது தோல்வியில் துவண்டு கிடக்கும் ஜூனியர் அணியை முன்னுக்கு கொண்டுவர அம்ருத்கலாம் முயற்சி எடுக்கிறார். அந்த ஊரில் நடக்கும் சாம்பியன் போட்டியில் கலந்துகொள்ள செய்து அவர்களை இறுதிப் போட்டி வரை கொண்டு செல்கிறார்.

இறுதிப் போட்டியில் சீனியர் அணியும், ஜூனியர் அணியும் மோதுகிறது. அதில் யார் வென்றார்கள்? ஜெயப்பிரகாஷின் குடும்ப பிரச்சினை என்ன ஆனது? என்பதை இறுதியில் சொல்லியிருக்கிறார்கள்.

நிரஞ்சன், துஷ்யந்த் என இரண்டு கதாநாயகர்களும் கதைக்களத்திற்கேற்றபடி நடித்துள்ளனர். படத்தில் காதல் காட்சிகள் என்பது மிக குறைவாக இருந்தாலும் நாயகியாக வரும் நித்யா ஷெட்டி கண்களாலேயே பேசுகிறார்.

வழக்கம்போல் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஜெயப்பிரகாஷ். விளையாட்டை மையமாக வைத்து எடுத்திருந்தாலும் ஒரு குடும்ப பிரச்சினைக்கான முடிவையும் அற்புதமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் மிதுன் மாணிக்கம்.

சுவாமிநாதன் இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை, பின்னணி இசையும் ஓகே ரகம்தான்.

மொத்தத்தில் ஐவராட்டத்துக்கு இன்னும் தேவை விறுவிறுப்பு.

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top