நடிகர்களை மிரட்டும் ‘ரெட்’ ஆயுதம்..! – அடிபணிந்த ரஜினி, அடங்காத கமல்…

தமிழ்சினிமாவில் நிகழ்த்தப்பட்ட ஒவ்வொரு தொழில்நுட்பப்புரட்சியிலும் முன்னோடியாக இருப்பவர் கமல்ஹாசன்தான்.

அதை நடைமுறைப்படுத்த முனைந்தபோதெல்லாம் பல நேரங்களில் நையாண்டியும் செய்யப்பட்டிருக்கிறார்.

அதை எல்லாம் புறந்தள்ளிவிட்டுத்தான் வெற்றியடைந்திருக்கிறார் கமல்.

தொழில்நுட்பப் புரட்சியில் மட்டுமல்ல தொழில் புரட்சியிலும் கமலே முன்னோடி என்று சொல்லப்படும் காலம் விரைவில் ஏற்பட இருக்கிறது.

திரைப்படத்துறையில் இயங்கும் பல்வேறு அமைப்புகள்… குறிப்பாக விநியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர் அதிபர்கள் சங்கம், தென்னிந்திய தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகள்.. ‘ரெட்’ (RED) என்று சொல்லப்படும் ‘ரெட் கார்டு’ (RED CARD) என்ற ஆயுதத்தை பயன்படுத்தி நடிகர்களை, தயாரிப்பாளர்களை பயமுறுத்தி வருகின்றனர்.

இந்த பயமுறுத்தலுக்கு ரஜினியும் தப்பவில்லை. பாபா, குசேலன் படங்களினால் விநியோகஸ்தர்கள் நஷ்டமடைந்ததாக சொல்லப்பட்டபோது அவர்களுக்கு ரஜினி நஷ்டஈடு வழங்கியதன் பின்னணியும் இந்த ‘ரெட்’ மிரட்டல்தான்.

ரஜினி மட்டுமல்ல பல முன்ணி நடிகர்கள், பிரபல இயக்குநர்கள், புகழ்பெற்ற தயாரிப்பாளர்கள் இந்த ‘ரெட்’ ஆயுதத்தினால் மிரட்டப்பட்டுள்ளனர். ஆனாலும் இதை எதிர்த்து யாரும் வாயைத் திறந்தது இல்லை.

முதன்முறையாக கமல்ஹாசன் என்ற கலைஞன் பூனைக்கு மணி கட்டி இருக்கிறான்.

‘விஸ்வரூபம்’ படத்தை தியேட்டரில் வெளியிடும் அதே நாளில், டி.ட்டி.ஹெச். என்கிற டைரக்ட் டூ ஹோம் மூலம் படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தார்.

அப்போது ஏற்பட்ட பிரச்சனையில், அபிராமி ராமநாதன் மற்றும் திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் பன்னீர் செல்வம் இருவரும் விஸ்வரூபம் படத்தை தியேட்டர்களில் வெளியிட அனுமதிக்க முடியாது என்கிற ரீதியில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்தனர். அறிக்கையும் வெளியிட்டனர்.

இப்படியான அறிவிப்பு ஒருவகையில் மிரட்டல். தொழில் செய்பவர்களின் சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்பதால் இது குறித்து தக்க ஆதாரங்களுடன் கமல்ஹாசன் சார்பில், ‘காம்படிஷன் கமிஷன் ஆஃப் இந்தியா (competition commission of india) அமைப்பில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார் ‘விஸ்வரூபம்’ படத் தயாரிப்பாளரான சந்திரஹாசன்.

அந்த வழக்கை விசாரித்த ‘காம்படிஷன் கமிஷன் ஆஃப் இந்தியா’ அமைப்பினர், அபிராமி ராமநாதன் மற்றும் பன்னீர் செல்வம் இருவருக்கும் பெரும்தொகையை அபராதமாக விதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், தற்போது கமல்ஹாசன் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘உத்தம வில்லன்’ ஏப்ரல் 10ம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது அபிராமி ராமநாதன் மற்றும் பன்னீர்செல்வம் இருவரும் ‘விஸ்வரூபம்’ வழக்கை கமல்ஹாசனை மிரட்டும் ஆயுதமாக கையில் எடுத்திருக்கிறார்கள்.

‘காம்படிசன் கமிஷன் ஆஃப் இந்தியா’வின் தீர்ப்பு தங்களுக்கு எதிராக வரவிருப்பதால், வழக்கில் சமரசமாக போய்விடலாம் என்று கமல்ஹாசனிடம் பேசியிருக்கிறார்கள். ‘காம்படிசன் கமிஷன் ஆஃப் இந்தியா’ அமைப்பில் வழக்கில் சமரசம் செய்ய இடமில்லை. ஆகையால் என்னால் எதுவும் செய்ய முடியாது” என்று கமல் தெரிவித்திருக்கிறார்.

அப்படியென்றால் விதிக்கப்படும் அபராதத் தொகையை நீங்களே செலுத்தி விடுங்கள் என்ற கமல்ஹாசனிடம் பன்னீர் செல்வம் கோரிக்கை வைக்க, அதையும் கமல்ஹாசன் நிராகரித்துவிட்டார். வழக்கு செலவையாது ஏற்க வேண்டும் என்று கூறியதற்கு, “எதிர்த்து வாதாடியது நீங்கள். அதற்கு நான் ஏன் பணம் தர வேண்டும்?” என்று அதையும் கமல்ஹான் நிராகரித்துவிட்டார்.

இதற்கிடையில் இன்னொரு சம்பவம்!

நடிகர் மன்சூர் அலிகான் தயாரித்து இயக்கி நடிக்கும் அதிரடி படத்தின் படப்பிடிப்பை ஃபெப்சி அமைப்பினர் தடுத்துள்ளனர்.

இதுகுறித்து, மன்சூர் அலிகான் வழக்குத் தொடர, ”மன்சூரலிகான் யாரை வேண்டுமானலும் தனது படங்களின் படப்பிடிப்புக்கு வேலைக்கு வைத்துக் கொள்ளலாம். ஃபெப்சி தொழிலாளர் அமைப்புக்கு தடுக்க உரிமை இல்லை” என்று உயர்நீதிமன்றம் இடைக்கால தடையாணை வழங்கி, மன்சூர் அலிகானுக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

கமல்ஹாசன் வழக்கில் தியேட்டர் அதிபர்களுக்கு எதிராக வர உள்ள தீர்ப்பும், மன்சூரலிகான் வழக்கில் ஃபெப்சிக்கு எதிரான தீர்ப்பும் தயாரிப்பாளர்கள் மத்தியில் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்துக்கு வழி வகுத்திருப்பது மட்டுமல்ல, ரெட் கார்டைக் காட்டி பயமுறுத்தி வந்த அமைப்புகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.

அது என்ன ரெட்?

விநியோகஸ்தர்களின் நலன்காக்க, அவர்களை நஷ்டத்திலிருந்து மீட்க ஏற்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படும் இந்த ரெட், உண்மையில் தயாரிப்பாளர்களை மிரட்ட விநியோகஸ்தர்கள் சங்கம் பயன்படுத்தும் துருப்புச்சீட்டாகவே நடைமுறையில் இருக்கிறது.

ஒரு படத்துக்கு ரெட் போடப்பட்டால் அந்தப்படத்தை எந்த விநியோகஸ்தரும் வாங்கக் கூடாது என்பது எழுதப்படாத சட்டம். அதை மீறி ஒருவரும் படத்தை வாங்க முன் வர மாட்டார்கள்.
சரி..நாமே சொந்தமாக ரிலீஸ் செய்யலாம் என்றால், அதற்கும் மறைமுகமாக பலவிதமான தடைகளை விநியோகஸ்தர்கள் ஏற்படுத்துவார்கள். இப்படிப்பட்ட இக்கட்டான நிலை ஏற்படும்போது தயாரிப்பாளர் என்ன செய்வார்? விநியோகஸ்தர்களிடம் அடிபணிவதைத் தவிர வேறு வழியில்லை.

தங்களை யாரும் தட்டிக் கேட்க முடியாது என்ற இறுமாப்பில் இன்னும் எத்தனையோ கொடுமைகளை விநியோகஸ்தர்கள் சங்கங்கள் செய்து கொண்டிருக்கின்றன.

ஒரு நடிகையோ, நடிகரோ சொந்தப் படம் எடுப்பதாக வைத்துக் கொள்வோம். அந்தப் படத்தை வாங்கிய வகையில் ஒரு விநியோகஸ்தருக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கும். நஷ்டம் அடைந்ததாகச் சொல்லும் விநியோகஸ்தர், அந்த நடிகரை அல்லது நடிகையை வைத்து வேறு தயாரிப்பாளர்கள் படம் எடுக்கும் வரை, மிகப்பெரிய சதித்திட்டத்தோடு காத்திருப்பார். யாராவது அந்த நட்சத்திரங்களை வைத்து படம் ஆரம்பித்தால் போதும், ”அந்த நடிகர் சொந்தப்படம் எடுத்தபோது எனக்கு இவ்வளவு நஷ்டம். அதை நீங்கள்தான் கொடுக்க வேண்டும், தர மறுத்தால் சங்கத்தின் மூலம் ரெட் போடுவோம்” என்று மிரட்டுவார்.

யாரோ ஒரு நடிகர் எடுத்த படத்தினால் நஷ்டப்பட்டதால், அவருக்கு சம்மந்தமே இல்லாத ஒருவர் நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று கேட்பது எப்படி நியாயமாகும்? இந்த அநியாயத்தைத்தான் காலம்காலமாக செய்து கொண்டிருக்கிறார்கள்-விநியோகஸ்தர்கள்.

சில வருடங்களுக்கு முன், பணம் சம்பாதிக்கும் ஆசையில் விநியோகஸ்தர் ஒருவர் ஸ்டார் நைட் நடத்தும் ஏற்பாடுகளில் இறங்கினார். அந்த ஸ்டார் நைட்டில் கலந்து கொள்ள சில நடிகைகளுக்கு அட்வான்ஸ் கொடுத்தார். அதன் பிறகு அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

இந்த சம்பவத்துக்கும், அந்த நடிகைகளை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளருக்கும் என்ன சம்மந்தம்? அந்த விநியோகஸ்தர் என்ன செய்தார் தெரியுமா? குறிப்பிட்ட அந்த நடிகைகள் நடிக்கும் படத்திற்கு ரெட் போட்டுவிட்டார். காரணம். அப்போது, அந்த சங்கத்தின் தலைவரே அவர்தான்!

அதில் ஒரு நடிகை அப்போது ஒரு படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். அந்தப் படத்துக்கு ரெட் போட்டவர்கள், ஸ்டார் நைட்டுக்காக பணம் வாங்கிய மற்றொரு நடிகை நடித்து அப்போது வெளி வரவிருந்த இன்னொரு படத்துக்கும் ரெட் போட்டு விட்டனர்!

மற்ற ஏரியாக்களில் இருந்தெல்லாம் இந்தப் படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் வந்தார்கள். குறிப்பிட்ட அந்த ஏரியாவை வாங்க மட்டும் எவருமே வரவில்லை. கடைசியில்தான் இந்த ரெட் விவகாரமே தயாரிப்பாளர்களுக்குத் தெரிய வந்தது.

சம்மந்தமே இல்லாமல் எங்கள் படத்துக்கு ரெட் போட்டது ஏன் என்று நியாயம் கேட்டும் அந்த விநியோகஸ்தர் அசைந்து கொடுக்கவில்லை. படம் வெளியிட இன்னும் ஒரே ஒரு நாள்தான் இருக்கிறது என்ற இக்கட்டான சூழ்நிலையில் தயாரிப்பாளர் காலைப்பிடிக்காத குறைதான்.

ஒரு நாள் முழுக்க அவரது அலுவலகத்தில் காத்துக்கிடந்து. எவ்வளவோ கெஞ்சிக்கேட்டும் அந்த விநியோகஸ்தரின் கல்நெஞ்சு கரையவில்லை. கடைசியில் படம் வெளியாக வேண்டுமே என்பதால், வேறு வழியில்லாமல், அவர் கேட்ட பெரும் தொகையை தண்டம் அழுதுவிட்டு வந்தார் அந்தத் தயாரிப்பாளர். அதன் பிறகே ‘ரெட்’ டை நீக்கினார் அந்த ஏரியாவின் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர்.

இது சின்ன உதாரணம்தான். யாரோ பட்ட கடனுக்காக தன் பணத்தைக் கொடுத்து தண்டம் அழுததினால் விநியோகஸ்தர்களால் குடி கெடுக்கப்பட்டு, குடி மூழ்கிப்போனவர்களின் கண்ணீர்க் கதைகள் இப்படி எத்தனையோ இருக்கின்றன.

சரி.. விநியோகஸ்தர்கள் போடும் ரெட் கார்டு என்கிற தடையை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கலாமே? ஏன் அப்படி யாரும் செய்யவில்லை என்று உங்களுக்கு கேள்வி எழலாம்.

இப்படி ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக சாமர்த்தியமாக செயல்படுகிறார்கள். அதாவது இந்தப்படத்துக்கு ரெட் என்றோ, அதை யாரும் வாங்கக்கூடாது என்றோ வெளிப்படையாக எழுத்துப்பூர்வமாக அவர்கள் அறிவிப்பதில்லை. அப்படிச் செய்தால் அதுவே தக்க சாட்சியமாகி, அவர்களுக்கு எதிராகத் திரும்பிவிடுமே? அதனால் படு உஷாராக காய் நகர்த்துகிறார்கள்.

எப்படி தெரியுமா?

குறிப்பிட்ட படத்தின் பெயரைக்குறிப்பிட்டு, ‘இந்தப்படத்தை வாங்குவதற்கு முன் நம் சங்கத்தை அணுகவும்’ என்று அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்புவார்கள்.
அதைப்பார்த்தாலே சம்மந்தப்பட்ட படத்துக்கு ரெட் போடப்பட்டதைப் புரிந்து கொள்வார்கள் சங்க உறுப்பினர்கள். ஒருவேளை காரணம் புரியாதவர்கள் சங்கத்தை அணுகினால், அந்தப்படத்தை வாங்க வேண்டாம் என வாய்மொழியாக எச்சரித்துவிடுவார்கள்.

அதன் பிறகு படத்தை யார்தான் வாங்குவார்கள்?

எந்தவொரு சங்கமும், அதன் உறுப்பினர்கள் சார்ந்த தொழிலின் முன்னேற்றத்துக்கு பக்கபலமாக இருந்தால்தான் அந்தத் தொழிலும் உருப்படும், தொழில் செய்பவர்களும் உருப்படுவார்கள்.
விநியோகஸ்தர்கள் சங்கங்களோ படம் எடுப்பவர்களைப் பாடாய்படுத்தி, அவர்களை படுகுழியில் தள்ளி சமாதி கட்டுவதை மட்டுமே தங்களின் கடமையாக செய்து கொண்டிருக்கின்றன.
இவர்களின் அராஜகங்களுக்கு அஞ்சியே பல தயாரிப்பாளர்கள் படம் எடுக்காமலே இருக்கிறார்கள்.

தியேட்டர் அதிபர்களுக்காக எதிராக கமல் எடுத்த நடவடிக்கை அவர்களை நிலைகுலைய செய்திருக்கிறது.

ஃபெப்ஸி அமைப்புக்கு எதிராக மன்சூரலிகான் தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு ஃபெப்ஸி அமைப்பை நிம்மதி இழக்கச் செய்திருக்கிறது.

இந்த வரிசையில் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் ரெட் மிரட்டல்களுக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் அணிதிரண்டு முடிவுரை எழுதினால்… திரையுலகம் உருப்பட்டுவிடும்.

சுதந்திரமாக தொழில் செய்யும் சுமுகமான சூழல் உருவாகிவிடும். 

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top