கதை கேளு… கதை கேளு… அண்ணன் தம்பி கதை கேளு…!

உலகத்தின் எந்த மூலையிலிருந்து நடிக்க வந்தாலும் சரி, எல்லாருடைய கண்களும் கேரளாவை நோக்கிதான் இருக்கும். ஏன்? ஹீரோயினை அங்கிருந்து வளைத்துக் கொண்டு வந்தால்தான் வாசல் கோலம் வசீகரமாக இருக்கும் என்கிற நம்பிக்கைதான். அந்த நம்பிக்கையை அப்படியே ஏந்திக் கொண்டு வந்திருக்கிறது இன்னொரு டீம்! இவர்கள் ‘சாந்தன்’ என்ற படத்தை எடுத்து வருகிறார்கள். ‘கதை கேளு கதை கேளு…நிஜமான கதை கேளு….’ என்று தமிழிலக்கியம் படித்த சாம்ராஜ் கூவிக் கொண்டிருக்க, கோவிலில் சிலை வடித்துக் கொண்டிருந்த ஸ்தபதி மாதேஸ்வரன் காதுகளுக்கு மட்டும் அந்த கூக்குரல் சங்கீதமாக கேட்டிருக்கிறது. அவ்வளவுதான்… ‘நான் இருக்கேன் தம்பி’ என்று தயாரிப்பாளர் ஆகிவிட்டார்.

‘கதையை கேட்டு முடிச்சதும், அதில் வர்ற முக்கியமான ரோலில் நானே நடிச்சா என்னன்னு தோணுச்சு. நடிச்சுட்டேன்’ என்றார் அந்த மாதேஸ்வரன். (பின்ன… அவ்வளவு பணம் போட்டு எலி எதுக்கு எட்டு முழ வேட்டி கட்டணுமாம்?) ‘வெகு காலம் கழித்து உணர்ச்சி பூர்வமான அண்ணன் தம்பி கதையை எடுத்திருக்கேன்’ என்கிறார் சாம்ராஜ். வழக்கம் போல காஷிகா என்ற கேரள நாட்டு இளம் பெண் ஒருவரை இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க வைத்திருக்கிறார்கள்.

‘ஈரோடு கோவை அதை சுற்றிய ஊர்களில் உருவான முக்கியமான கோவில்களுக்கெல்லாம் நான்தான் ஸ்தபதி. அப்படையில் சிற்பம் வடிக்கும் தொழில்தான் எனக்கு என்றாலும், ஹீரோயின் சிலை மாதிரியிருக்கணும் என்றெல்லாம் நினைக்கவில்லை. கதைக்கு என்ன தேவையோ, அந்த ஹீரோயின் எப்படியிருக்கணுமோ, அதையெல்லாம் டைரக்டர்தான் பார்த்துகிட்டார்’ என்றார் மாதேஸ்வரன்.

கதை உள்ளூர்ல நிகழ்ந்தாலும், கனடாவிலிருந்து ஒரு இசையமைப்பாளரை கூட்டிக் கொண்டு வந்திருக்கிறார்கள். பெயர் ரவி பிரியன். ‘இங்க இல்லாத இசையமைப்பாளர்களா ?’ என்றால், ‘அவரு ரொம்ப நாளா டச்சிலேயே இருந்தார். அதான்’ என்கிறார் டைரக்டர். கொடுக்கறத வாங்கிகிட்டு பாடிக்கொடுத்திருக்கிறாராம் கானா பாலா. எப்படியோ எல்லாரும் கூடி சரக்கடிக்கிற பாட்டு ஒண்ணு நிச்சயம். இல்லேன்னா கானா பாலா எதுக்கு?

‘உளி கையில படாம படத்தை ரிலீஸ் பண்ணிடுங்க… அது போதும்’ என்று வாழ்த்துவதுதான் இப்போதைக்கு முக்கியமான அட்வைஸ்!

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top