எந்தப்படமா இருந்தாலும் மூணு நிமிஷம் தான்! : வைரமுத்து சொன்ன மணிரத்னம் ரகசியம்

இவர் படங்களைப் பார்த்து தான் எனக்கு சினிமாவில் நடிக்கிற ஆசையே வந்தது என்று சொல்லிக்கொண்டிருந்த ஹீரோக்கள் கூட மணிரத்னத்துக்கு கால்ஷீட் கொடுக்கவில்லை.

கடந்த சில படங்களாக தொடர் தோல்விகளின் உச்சத்தில் இருந்த பிரபல இயக்குனர் மணிரத்னம் புதிதாக இயக்கி வரும் படம் தான் ஓ காதல் கண்மணி.

துல்கர் சல்மான், நித்யா மேனன் ஹீரோ, ஹீரோயின். வழக்கம் போல படத்துக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான் தான். பாடல்களும் அதே வைரமுத்து தான். ரோஜாவில் தொடங்கிய இந்த காம்பினேஷன் இப்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், மணிரத்னத்தின் ‘ஓ காதல் கண்மணி’ படத்தைப் பற்றியும், மணிரத்னத்தைப் பற்றியும் தனது திருவாய் மலர்ந்தருளியுள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து.

‘ஓ.கே. கண்மணி’ என்ற டைட்டிலை முதலில் மணிரத்னம் என்னிடம் சொன்னபோது. ஆகா நன்றாக இருக்கிறதே என்று சொன்னேன். அவர் கதை சொல்கிற விதம், உங்களுக்கெல்லாம் சொன்னால் ஆச்சர்யமாக இருக்கும்.

மணிரத்னம் தன்னுடைய எந்த கதையையும் 3 நிமிடங்களுக்கு மேல் எனக்கு சொன்னதில்லை. 3 நிமிடங்களில் விளக்க முடியாத கதை, கதையே இல்லை என்பது அவரது எண்ணம். அவருடைய வசனங்கள் கூர்மையாகவும், நறுக்கு தெரித்ததாகவும், சுருக்கமாகவும் இருப்பதைப்போலவே அவர் கதை சொல்லும் முறையும்.

எது தேவையோ, எந்த சொற்கள் மட்டும் தேவையோ அதை மட்டுமே பயன்படுத்துவார். ஆனால், அவர் சொல்லி முடித்திருக்கிற மிகச் சில நிமிடங்களில் முழுக் கதையும் என் மூளையில் வந்து தங்கி விடும்.

இரண்டு பாத்திரங்கள், அவர்களுக்குள் ஒரு காதல், அவர்களுக்குள் ஒரு நிபந்தனை, அவர்களின் மனநிலை, எண்ண ஓட்டம், இவைகளைப் பற்றிய கோடுகளை மட்டும் வரைந்து காட்டுவார். சித்திரத்தை நான் வரைந்து கொள்ள வேண்டும். இதுதான் மணிரத்னத்தின் தனி பாணி என்று நினைக்கிறேன்.

‘ஓ.கே.கண்மணி’ ஒரு அழகான காதல்களம். வழக்கமாக, மணிரத்னம் ஆடி களிக்கிற, ஆடத் துடிக்கிற, ஆடி ஜெயிக்கிற ஒரு களம். அந்த களத்தில் மீண்டும் அவர் விருப்பத்தோடு இறங்கியிருக்கிறார். இந்த களத்தில் அவர் வெற்றி பெறுவார் என்று கூறியிருக்கிறார் வைரமுத்து.

கடந்த நான்கைந்து படங்களாகவே தொடர் தோல்விகளை கொடுத்து வரும் மணிரத்னம் இந்தப்படத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இல்லேன்னா இமேஜ் என்னாகிறது?

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top