பாராட்டு மழையில் நனையும் தனுஷின் ‘காக்கா முட்டை’..!

ரிலீஸுக்கு முன்பே பல விருதுகளை அள்ளிய படம் ’காக்கா முட்டை’. மணிகண்டன் இயக்கத்தில், புதுமுகம் பேபி ஆன்டனி, ஐஸ்வர்யா ராஜேஷ், ரமேஷ், விக்னேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தைத் தனுஷ், வெற்றிமாறன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

சிறுவர்களை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை அள்ளிக் கொண்டிருக்கிறது. இதனால் ’காக்கா முட்டை’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிக் கொண்டே போகிறது.

சென்னையை சேர்ந்த நான்கு சேரி சிறுவர்கள் நெருக்கமான நண்பர்கள். அவர்களின் சேரிக்கு அருகில் ஒரு பீட்சா கடை வருகிறது. அந்த கடைக்கு சென்று ஒரு பீட்சாவை வாங்கி ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்பதுதான் அவர்கள் ஆசை. அதற்காக அவர்கள் என்ன செய்தார்கள்..? அவர்கள் ஆசை நிறைவேறியதா..? என்பதுதான் கதை.

இப்படத்திற்கான பிரத்யேக பத்திரிகையாளர் காட்சி நேற்று (ஜூன் 2) சென்னை பிரிவியூ தியேட்டர் ஒன்றில் திரையிடப்பட்டது. படத்தின் ஆரம்பம் முதலே பத்திரிகையாளர்கள் ஒவ்வொருவரும் கைதட்டி ரசித்து படம் பார்த்தனர்.

பின்னர் படம் முடிந்து வெளியே வந்ததும் படத்தின் இயக்குநர் மணிகண்டன், சிறுவர்களின் அம்மாவாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் கைகளைப் பிடித்து தங்களது பாராட்டுக்களை தெரிவித்துச் சென்றனர்.

1 மணி 51 நிமிடங்கள் ஓடும் இப்படம் குறித்த தங்களது பாராட்டுக்களை ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பத்திரிகையாளர்கள் பலரும் பகிர்ந்த வண்ணம் உள்ளனர். ஒரு சிலர் இப்படத்தை தமிழின் ‘பதேர் பாஞ்சாலி’ என்றும் இயக்குநர் மணிகண்டனை தமிழின் சத்யஜித் ரே என்றும் புகழ்ந்துள்ளனர்.

அதோடு இப்படம் இன்னும் பல வருடங்களுக்கு பேசப்படும் படமாக இருக்கும் என்றும் புகழ்கின்றனர். இப்படத்தில் நடித்திருக்கும் ரமேஷ், விக்னேஷ் இரண்டு சிறுவர்களின் நடிப்பும், அவர்களின் அம்மாவாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் நடிப்பு மிக யதார்த்தமாக இருந்ததாக பல பத்திரிகையாளர்களும் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளனர்.

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top