சேதாரத்தை ... ஸாரி.. பாக்ஸ் ஆபிசை அடித்து நொறுக்கிய சான் ஆன்ட்ரியாஸ்!

எத்தனை பூகம்பம் கண்ணெதிரே வந்தாலும் அதனை மீண்டும் ஒருமுறை திரையிலும் பார்த்து ஆனந்தப்பட்டுக் கொள்ளும் நமது மக்கள் இருக்கும் வரை இந்த மாதிரி படங்களின் வசூலை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது போல.

பாஸ்ட் அண்ட் பியுரிஸ் படபுகழ் டுவைன் ஜான்சன் கதையின் நாயகனாக நடித்து மூன்று தினங்களுக்கு முன்பாக வெளிவந்த படம் சான் ஆன்ட்ரியாஸ்.


கடந்த வெள்ளிகிழமை திரைக்கு வந்த இந்த பூகம்பம்... ஸாரி... படம் இதுவரை வெளியான மூன்று தினங்களுக்குள் சுமார் 113 மில்லியனை வசூலித்து பாக்ஸ் ஆபிசையே அடித்து நொறுக்கியிருக்கிறது, மொத்தப்படத்திற்கான செலவே 100 மில்லியன்கள் தான். இதே வேகத்தில் ஓடினால் இந்த வருடம் வசூலில் இதுவரை வந்த ஹாலிவுட் படங்களிலேயே நம்பர் 1 படம் என்ற இடத்தைத் தட்டிச் செல்லக் கூடும்.

உலகமெங்கும் வெளியாகி வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கும் இப்படத்தில் அப்படி என்ன சொல்லியிருக்கிறார்கள்? பேரழிவு ஒன்றிலிருந்து தன் குடும்பத்தை காப்பாற்றும் நாயகனின் கதையைத்தான் இந்த ‘சான் ஆன்ட்ரியாஸ்' படத்திலும் காட்டியிருக்கிறார்கள்.

பழக்கப்பட்ட கதையாக இருந்தாலும் அதை ரசிகர்களுக்கு படைத்திருக்கும் விதத்தில் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்கள். எதற்காக படம் இந்த ஓட்டம் ஓடுகிறது, எல்லாம் படத்தை எடுத்திருக்கும் முறை பின்னணி இசை, விஷுவல் எஃபெக்ட்ஸ், கிராபிக்ஸ் மற்றும் காலம்காலமாக நமக்குள் உள்ள அச்சம் போன்றவைகள் தான் படம் இப்படி வசூலை வாரிக் குவிக்க காரணங்களாக உள்ளன.

படத்தில் காட்டியிருக்கும் பேரழிவுகளைப் பார்த்தால் இப்படியெல்லாம் நடக்குமா? என கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தாலும் இன்றைய சூழ்நிலையைப் பார்க்கும்போது இப்போது இல்லாவிட்டாலும், இதுபோல் எதிர்காலத்தில் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. மலை உச்சியிலிருந்து உருண்டு விழுந்த காருக்குள் இருக்கும் பெண்ணை காப்பாற்றும் அந்த அறிமுகக் காட்சி அசத்தல். அதிலும் 3டியில் பார்க்கும்போது நாமே விழுவதுபோல் லேசாக பீதியை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

இதுபோன்ற பூகம்பங்கள் வந்தால் வளர்ந்த நாடுகளின் மிகப்பெரிய அணைக்கட்டுகளால் எத்தகைய பேராபத்து ஏற்படும் என்பதை சமூக அக்கறையோடு இப்படத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். அமெரிக்காவைப் பார்த்து நாம் ஆச்சரியப்படும் வானுயர்ந்த கட்டிடங்கள், பூகம்ப நேரங்களில் எவ்வளவு அச்சத்தை ஏற்படுத்தும் என்பதை தத்ரூபமாக ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கியிருக்கிறார்கள். சான்பிரான்ஸிஸ்கோ நகரமே இரண்டாகப் பிளந்து நிற்கும் காட்சியை ரசிகர்கள் வாய் பிளந்து ரசிக்கிறார்கள். பின்னணி இசை, விஷுவல் எஃபெக்ட்ஸ், கிராபிக்ஸ் ஆகியவை இப்படத்தில் உச்சபட்ச உழைப்பைக் கொட்டியிருக்கின்றன.

கதையும், காட்சிகளும் கொஞ்சம் ஏற்கெனவே பார்த்துவிட்ட உணர்வை ஏற்படுத்தினாலும் 2012, ஆர்ட்டிக் பிளாஸ்ட், தி டே ஆப்டர் டுமாரோ, ட்விஸ்ட்டர் போன்ற படங்களின் வரிசையில் இந்த ‘சான் ஆன்ட்ரியாஸு'ம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சான் ஆன்ட்ரியாஸ் - வசூல் "பூகம்பம்"!

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top