மாஸ்’ நிச்சயம் உங்களை ஏமாற்றாது - கதைக்களம்

பேரழகன், வேல், வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு, மாற்றான் படங்களைத் தொடர்ந்து இரட்டை வேடங்களில் சூர்யா நடித்திருக்கும் படம் ‘மாசு என்கிற மாசிலாமணி’. தனது 6வது படத்தில் வெங்கட் பிரபு சிக்ஸர் அடித்திருக்கிறாரா?

கதைக்களம்

சூர்யாவும், பிரேம்ஜி அமரனும் ஊரை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் இணைய பிரியாத நண்பர்கள். ஒரு முறை பெரிய தாதா ஒருவரின் பணத்தை சுருட்டிக் கொண்டு ஓட, அவர்கள் இருவரையும் துரத்துகிறான் அந்த தாதா. எஸ்கேப்பாகும் அந்தத் தருணத்தில் சூர்யா ஓட்டிச் செல்லும் கார் ஆக்ஸிடென்ட் ஆகிறது. அதில் பிரேம்ஜி இறந்துவிட, சாவின் விளிம்புக்குச் சென்று உயிர் பிழைக்கிறார் சூர்யா. ஆனால் அந்த ஆக்ஸிடென்ட்டிற்குப் பிறகு சூர்யா வாழ்க்கையில் சில சுவாரஸ்ய அமானுஷ்யங்கள் நடக்கின்றன. அது என்ன என்பதைத் தெரிந்துகொள்ள உடனே ‘விசிட்’ அடியுங்கள் திரையரங்கிற்கு...!

படம் பற்றி அலசல்

‘சாதாரண மனிதனின் கண்களுக்கு ஆவிகள் தென்படத் துவங்கினால் என்ன ஆகும்?’ என்ற ஒன்&லைனை கையிலெடுத்து அதில் சூர்யாவின் மாஸை இணைத்துக் கொடுத்திருக்கிறார் வெங்கட் பிரபு. சூர்யாவின் கேரியரில் நிச்சயம் இது புதிய ஆட்டம்தான். இதுவும் வழக்கமான காமெடி கலந்த பேய் சம்பந்தப்பட்ட கதைதான் என்றாலும் யாமிருக்க பயமே, அரண்மனை, காஞ்சனா 2 ஆகிய படங்களிலிருந்து தனித்து நிற்கிறது மாஸ். மேற்கண்ட படங்களில் கோர முகத்தையும், அலறும் பின்னணி இசையையும் சேர்த்து ரசிகர்களை பயமுறுத்தி சிரிக்க வைத்திருப்பார்கள். ஆனால் வெங்கட் பிரபுவோ வழக்கமான மாஸ் ஹீரோ படத்துக்குள் குழந்தைகளும் ரசிக்கும்படியான பேய்களைப் புகுத்தி ‘பூச்சாண்டி’ காட்டியிருக்கிறார்.

முதல்பாதி ஜாலி கேலி என்றால், 2வது சூர்யாவின் அறிமுகத்திற்குப் பின்னர் வரும் இரண்டாம்பாதி வெங்கட்பிரபுவின் டிரேட்மார்க் ஸ்கிரீன்ப்ளே. அதில் எமோஷனலாக சில இடங்கள் நம்மை பாதிக்கின்றன. சிற்சில இடங்கள் கொஞ்சம் சோதிக்கின்றன. அதேபோல் லாஜிக்கும் ஆங்காங்கே இடிக்கிறது. க்ளைமேக்ஸில் வழக்கம்போல் வெங்கட்பிரபு கலகலப்பூட்டுகிறார்.

இதுபோன்ற ஃபேன்டஸி ஹாரர் படங்களுக்கு டெக்னிக்கல் விஷயங்களின் பங்களிப்பு மிக அவசியம். அந்தவகையில் ஆர்.டி.ராஜசேகரின் கேமரா ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. ‘பிறவி’ பாடலைக் கேட்கும்போது கண்களில் துளிநீரை எட்டிப் பார்க்க வைத்திருக்கிறார் யுவன். குழந்தைகளைக் கவரும் வகையில் சிஜி காட்சிகள் பங்களித்திருக்கின்றன.

நடிகர்களின் பங்களிப்பு

இரட்டை வேடமென்றால் சூர்யா பற்றி சொல்லவே தேவையில்லை. மாஸ், சக்தி என இரண்டு கேரக்டரிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். குறிப்பாக இடைவேளையின்போது குடுமி கெட்அப்பில் 2வது சூர்யா அறிமுகமாகும் காட்சியில் தியேட்டர் அதிர்கிறது. அவர் பேசும் ஈழத் தமிழும் கொள்ளை அழகு. சூர்யா ஸ்பெஷல் ரொமான்ஸ் காட்சிகள் இல்லை என்பதைத் தவிர்த்து ஒட்டுமொத்தமாக நம்மை அசரடிக்கிறார் சூர்யா. இப்படத்திற்குப் பிறகு ஏற்கெனவே இருக்கும் சூர்யாவின் குழந்தை ரசிகர் பட்டாளம் இன்னும் பெரிதாகும்.

நயன்தாரா, ப்ரணிதா இரண்டு ஹீரோயின்களுக்கும் இப்படத்தில் பெரிய வேலை எதுவும் இல்லை. சூர்யாவின் இமேஜோடு பிரேம்ஜியைப் பொருத்திப் பார்ப்பது ஆரம்பத்தில் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும் போகப்போக பழகிவிடுகிறது. ஆனால் பிரேம்ஜியின் வழக்கமான காமெடி இதில் மிஸ்ஸிங். சூர்யாவால் பழிவாங்கப்படும் வில்லன் கேரக்டர் சமுத்திரக்கனிக்கு. ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. கொஞ்ச நேரமே வந்தாலும், பார்த்திபன் ‘டச்’ செய்கிறார். அதேபோல் 2 சீன்களில் வந்து மொத்த ரசிகர்களையும் குஷிப்படுத்தியிருக்கிறார் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன்.

பலம்

1. மாஸ், சக்தி என ‘டபுள் தமாக்கா’ பெர்ஃபாமன்ஸ் கொடுத்திருக்கும் சூர்யா
2. சுவாரஸ்யமான படத்தின் முதல்பாதியும் சிற்சில எதிர்பார்க்காத திருப்பங்களும்
3. ஆர்.டி.ராஜசேகரின் ‘கலர்ஃபுல்’ ஒளிப்பதிவு

பலவீனம்

1. ‘இரண்டாம்பாதி கொஞ்சம் நீளமோ’ என்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கும் ஒருசில காட்சிகள்.
2. ‘பிறவி...’ தவிர்த்த மற்ற பாடல்கள் பெரிய அளவில் கவனம் ஈர்க்காதது.
3. கதாநாயகிகளின் கதாபாத்திரங்களை வீணடித்திருப்பது

மொத்தத்தில்...

வழக்கமான சூர்யா படம், லாஜிக் விஷயங்கள் என்பதையெல்லாம் மறந்துவிட்டு ஒரு ஜாலியான வெங்கட்பிரபு படத்தின் எதிர்பார்பார்ப்போடு சென்றால் இந்த ‘மாஸ்’ நிச்சயம் உங்களை ஏமாற்றாது. பெண்கள், குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் இந்த ‘மாஸ்’ படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் வெங்கட்பிரபு. சமீபகால பேய்ப் படங்களிலிருந்து தனித்து நிற்கிறது இந்த மாஸ்.

ஒரு வரி பஞ்ச் : சூர்யாவின் ‘டபுள்’ ஷாட்!

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top