கமல்ஹாசனால் முடிவது, ரஜினிகாந்தால் முடியாதது ஏன்.?

 ரஜினிகாந்த், கமல்ஹாசன் இன்றைய தமிழ்த் திரையுலகில் சீனியர் சூப்பர்ஸ்டார் நடிகர்கள். இருவரும் ஒரே கால கட்டத்தில் நாயகர்களாக உயர்ந்து தங்களுக்கென தனி இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். சுமார் 40 வருடங்களாக முன்னணி நடிகர்களாகவும் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

ரஜினிகாந்த் இன்றும் அவருடைய ஸ்டைலில் அசத்த, கமல்ஹாசன் இன்றும் அவருடைய நடிப்பு மற்றும் முத்தத்தில் அசத்த தங்களை இளம் நடிகர்களுடன் போட்டி போடும் அளவிற்கும் மெருகேற்றி வைத்திருக்கிறார்கள்.

2000 ஆண்டு வரை குறைந்த பட்சம் வருடத்திற்கு ஒரு படங்களாவது கொடுத்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த் 'பாபா' படத்திற்குப் பிறகு மூன்று வருட இடைவெளியில் 'சந்திரமுகி' படத்தில் நடித்தார்.

அடுத்து இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு 'சிவாஜி' படத்தில் நடித்தார். மீண்டும் மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு 'எந்திரன்' படத்தில் நடித்தார். அடுத்து நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு 'கோச்சடையான், லிங்கா' ஆகிய படங்களில் நடித்தார்.

'லிங்கா' படம் வந்து 5 மாதங்களாகியும் ரஜினியின் அடுத்த படம் பற்றி வதந்திகளும், தகவல்களும் மட்டுமே உலா வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், கமல்ஹாசன் 'உத்தம வில்லன்' படம் வந்து தோல்வியடைந்தாலும் அடுத்த 25வது நாளில் 'தூங்காவனம்' படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்துவிட்டார்.

அடுத்த மாதம் அவருடைய  'பாபாநாசம்' வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஐந்து வருடங்களாகத்தான் கமல்ஹாசன் படத்துக்குப் படம் கொஞ்சம் நீண்ட இடைவெளி கொடுத்துக் கொண்டிருந்தார்.

இந்த ஐந்து வருடங்களில் “மன்மதன் அம்பு, விஸ்வரூபம், உத்தம வில்லன்'' ஆகிய படங்களே வெளிவந்தன. ஆனால், இந்த ஆண்டில் அந்த இடைவெளியை அப்படியே குறைத்து விட்டார். இந்த ஆண்டில் 'உத்தம வில்லன், பாபநாசம்', ஆகிய படங்களுக்குப் பிறகு “விஸ்வரூபம் 2, தூங்காவனம்” ஆகிய படங்கள் வெளிவர வாய்ப்புள்ளன.

 'உத்தம வில்லன்' படம் தோல்வியடைந்தாலும் அடுத்தடுத்து படங்களில் நடிக்கும்படி தன்னைத் தயார்படுத்திக் கொண்டு வருகிறார் கமல்ஹாசன். ஆனால், ரஜினிகாந்த் இன்னும் 'லிங்கா' படத்தின் தோல்வியிலிருந்து எழுந்து வராமல் இருக்கிறார்.

ரஜினிகாந்த் விரைவில் அவருடைய அடுத்த பட அறிவிப்பை வெளியிட வேண்டுமென ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். ரசிகர்களின் ஆசையை ரஜினிகாந்த் நிறைவேற்றுவாரா  ?

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top