அதெப்படி என் பட கதையைக் கூறச் சொல்லி குஷ்பு கட்டாயப்படுத்தலாம்? - இயக்குநர்

குப்பி, வனயுத்தம் படங்களை இயக்கிய ஏ எம் ஆர் ரமேஷ், குஷ்புவைக் கண்டித்துள்ளார், திடீரென்று.

காரணம், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் என்ற புதுப் பதவியில் அமர்ந்திருக்கும் குஷ்பு, ரமேஷ் இயக்கும் அடுத்த படமான ஒரு மெல்லிய கோடு படத்தின் கதையை தன்னிடம் கூறுமாறு நிர்பந்தம் செய்கிறாராம்.

அந்தக் கதை முன்னாள் அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணத்தை பின்னணியாக வைத்து எடுக்கப்படுவதாக அறிந்த குஷ்பு, உடனே ரமேஷின் குழுவிலுள்ள ஒருவருக்கு போன் போட்டு, முதல்ல கதையை என்கிட்ட சொல்லுங்க, என்றாராம்.

அதெப்படி என் பட கதையைக் கூறச் சொல்லி குஷ்பு கட்டாயப்படுத்தலாம்? - இயக்குநர்

இதுகுறித்து ஏஎம்ஆர் ரமேஷ் கூறுகையில், "நடிகை குஷ்பு எங்கள் படக்குழுவை சேர்ந்த ஒருவரிடம் தொடர்பு கொண்டு படத்தின் கதை பற்றி விவாதித்துள்ளார். சுனந்தா புஷ்கர் வாழ்க்கை கதையையா படமாக்குகிறீர்கள் என்றும் கேட்டுள்ளார்.

இந்த படத்தின் மீது குஷ்பு ஏன் ஆர்வம் காட்டுகிறார் என்று புரியவில்லை. குஷ்பு காங்கிரசில் இருக்கிறார். நான் சுனந்தா புஷ்கர் வாழ்க்கையை படமாக்குகிறேன் என்று டெல்லியில் உள்ள யாரேனும் சந்தேகித்து குஷ்புவிடம் விசாரிக்க சொல்லி இருக்கலாம். ஆனாலும் என் படத்தின் கதையை யாரிடமும் நான் சொல்ல மாட்டேன்.

எந்த ஒரு நடிகரோ, டைரக்டரோ அவர்கள் படத்தின் கதையை வெளியே சொல்வது இல்லை. எனது உதவி இயக்குனர்களுக்குகூட இந்த படத்தின் கதை எதை பற்றியது என்று தெரியாது. குஷ்புவுக்கு கதை பற்றி தெரிய வேண்டுமானால் என்னிடம் நேரிலே பேசலாம்.

இப்போது சொல்கிறேன். இந்த படம் ஒரு மர்மமான கொலை பற்றியதுதான். மனிஷா கொய்ராலா கொலை செய்யப்படுகிறார். அந்த கொலை பற்றி துப்பு துலக்குவதுதான் கதை. படத்தை பற்றி வேறு எதையும் நான் சொல்ல மாட்டேன் ," என்றார்.

(சொல்ல மாட்டேன், சொல்ல மாட்டேன்னு முழுசா சொல்லிட்டீங்களே.. அப்புறமென்ன!)

குஷ்பு மறுப்பு

ஆனால் இதனை குஷ்பு மறுத்துள்ளார். தான் அப்படி யாரிடமும் கேட்கவில்லை என்றும், அவர்கள்தான் தன்னை படத்தில் நடிக்கக் கேட்டதாகவும், தான் மறுத்துவிட்டதாகவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அப்படின்னா.. இதுவும் 'பப்ளிகுட்டி' ஸ்டன்ட்தானா டைரக்டர்!

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top