ராஜதந்திரம் விமர்சனம் – நல்ல டைட்டிலை வெச்சிக்கிட்டு கண்றாவியான படத்தை எடுக்கிறவங்க கண்டிப்பா இந்தப் படத்தைப் பார்க்கணும்…!

ராஜதந்திரம் விமர்சனம். நல்ல டைட்டிலை வெச்சிக்கிட்டு கண்றாவியான படத்தை எடுக்கிறவங்க கண்டிப்பா இந்தப் படத்தைப் பார்க்கணும்…!

பெரும் ஆர்ப்பாட்டத்துடன் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகும் படங்களை விட சாதாரணமாகவே ரிலீஸ் ஆகும் படங்கள் சில சமயங்களில் அசாதாரண படங்களாக அமைந்துவிடுவதும் உண்டு. அப்படி ஒரு படம்தான் ராஜதந்திரம். கம்பீரமாக டைட்டிலை வைத்துவிட்டு சோதாவான கதையை படமாக்கிவிடுவார்கள் சிலர். ஆனால் டைட்டிலுக்கு ஏற்றார் போல் ராஜ தந்திரமான கதையுடன் களம் இறங்கியிருக்கிறது ராஜதந்திரம். நல்ல டைட்டிலை வெச்சிக்கிட்டு கண்றாவியான படத்தை எடுக்கிறவங்க கண்டிப்பா இந்தப் படத்தைப் பார்த்தாவது திருந்துங்கப்பா…!
Fox-Star-Studios-Release-Rajathanthiram-Movie-Posters
என்னதான் கதை…

சின்னச் சின்னதாய் ஏமாற்று வேலைகளில் ஈடுபடுகிற ஒருவன் ஒருகட்டத்தில் மிகப் பெரிய நகைக்கடை ஒன்றில் கொள்ளையடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. கொள்ளையடிக்கும் முன்பு தான் கொள்ளையடிக்கப் போவதை நகைக்கடை உரிமையாளருக்கும் காவல்துறைக்கும் தகவல் தந்துவிட்டு இவர்கள் கையில் சிக்காமல் எப்படி கொள்ளையடிக்கிறான் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

கதை என்னவோ ரெண்டு வரியில் இருந்தாலும் இரண்டு மணி நேர படத்தில் காட்சிக்கு காட்சி அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பை உருவாக்கியே படத்தை நகர்த்துகிறார்கள்.

படத்தின் முதல்பாதியில் கதாநாயகன் கதாநாயகி சம்பந்தமான காட்சிகள் கொஞ்சம் நிறையவே இருக்கின்றன. அதையும் ரொம்பவே சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள். இரண்டாவது பாதியில் நகைக்கடையில் கொள்ளையடிக்கும் காட்சிகள் ரொம்பவே விறுவிறுப்பாக இருக்கின்றன. நகைக்கடையின் வெளியே ஒரு பக்கம் காவல்துறையினரும், இன்னொரு பக்கம் நகைக்கடை உரிமையாளரின் ஆள்களும் உள்ளே இருக்கும் திருட்டுக் கும்பலை பிடிக்கக் காத்திருக்க இவர்களுக்கு அல்வா கொடுத்துவிட்டு ஹீரோவும் நண்பர்களும் தப்பிப்பது சுவாரஸ்யத்தின் உச்சம்.

கதாநாயகன் வீரா… கௌதம்வாசுதேவ் படங்களான பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம் படங்களில் சிறு சிறு வேடங்களில் தலை காட்டிய வீரா ‘நடுநிசி நாய்கள்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர். இந்தப் படத்தில் அர்ஜூன் கேரக்டராக படம் முழுக்க வலம் வருகிறார். மிஷல் கேரக்டரில் ரெஜினா. கதாநாயகி என்பதால் ஸ்பெஷலான காட்சிகளோ கவர்ச்சி குத்தாட்டமோ வைக்காமல் இயல்பான ஒரு கேரக்டராகவே இவரை அலைய விட்டிருக்கிறார்கள். அர்ஜூனுக்காக எம்எல்எம்மில் ஆள் சேர்த்துவிட முயற்சிக்கும் போது கோபத்தில் அர்ஜூன் ரெஜினாவிடம் கோபமாக சொல்லும ‘மியூட்’ வசனமும்…. அந்த நேரத்தில் அவனை ரெஜினா சப்பென அறையாமல் சில வசனங்கள் பேசுவதும் கொஞ்சம் என்ன… நிறையவே வித்தியாசம்தான். வீராவின் நண்பர்களாக நடித்திருக்கிறார்கள் அஜய் பிரசாத், தர்புக சிவா. இவர்களில் தர்புக சிவா உதிர்க்கும் வசனங்களில் திரையரங்கமும் கொஞ்சம் கலகலக்கிறது. வெறும் நண்பர்களாக இல்லாமல் இவர்களையும் கதையோடு ஓடவிட்டு க்ளைமேக்ஸ் வரைக்கும் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். காஞ்சி அழகப்பன் என்னும் நகைக்கடை உரிமையாளராக வருகிறார் தயாரிப்பாளர் பட்டியல் சேகர். ரொம்பவே அமைதியாக இருப்பது போன்று இவர் இருந்தாலும் இவர் போடும் திட்டங்களும் வகுக்கும் தந்திரங்களும் டெரர். கதையின் முக்கியமான கேரக்டரான தர்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நரேன். எதுவாக இருந்தாலும் கூலாகவே கையாளும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரமும் ‘அட‘ போட வைக்கிறது.

இசை ஜிவி பிரகாஷ். இது போன்ற த்ரில்லர் படங்களுக்கு பாடல்கள் ஸ்பீட் பிரேக்காக மட்டுமே இருக்கும் என்பது தெரிந்து ஒரே ஒரு பாடலை மட்டும் வைத்திருக்கிறார்கள். விறுவிறுப்பான திரைக்கதைக்கு ரொம்பவே உதவியாக இருந்திருக்கிறது சந்தீப்பின் பின்னணி இசையும் பிரவீன் ஆன்டனியின் எடிட்டிங்கும். ஒளிப்பதிவு கதிர்… கதாநாயகன் தங்கியிருக்கும் அறைக்குள்ளேயே அதிகபட்ச கோணங்களை உள்வாங்கி பிரதிபலித்திருக்கிறது கேமிரா. இரண்டாவது பாதியில் குறிப்பாக கொள்ளை நடக்கும் இரவு நேரத்து காட்சிகள் கவர்கின்றன. படத்தை இயக்கியிருக்கிறார் அமித். விறுவிறுப்பான திரைக்கதை, சுவாரஸ்யமான காட்சிகளுடன் ராஜதந்திரத்தை உருவாக்கியிருக்கிறார். ஒவ்வொரு கேரக்டருக்கும் சரியான ஸ்பேஸ் கொடுத்து ஆட விட்டிருக்கிறார் இயக்குநர். படத்தில் வரும் சின்ன கதாபாத்திரம் கூட, குறிப்பாக வீரா ரெஜினாவை கோபமாக திட்டும் போது, தூக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்து மீண்டும் படுக்கும் கேரக்டர் கேரக்டர் கூட தனக்கென ஒரு தனி இடத்தை ரசிகர்கள் நினைவில் பெற்றுக் கொள்கிறார்கள்… ராஜதந்திரம் தமிழ் சினிமாவில் இந்த வருடத்தின் தவிர்க்க முடியாத படம்…

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top