இளஞ்சிட்டு பேசுது எங்கிட்டு போனீங்க ராசு?

எப்படிதான் இப்படியெல்லாம் டைட்டில் அமையுதோ? ‘இவனுக்கு தண்ணியில கண்டம்’! அதைவிட சிறப்பு… எங்கதான் இப்படியெல்லாம் ஹீரோவை பிடிக்கிறாங்களோ? நாம் தீபக்கை சொல்லவில்லை. இந்த படத்தின் முதல் அட்ராக்ஷன் என்று பெயரெடுத்துவிட்ட நான் கடவுள் ராஜேந்திரனைதான் சொல்கிறோம் ஹீரோ என்று! படத்தின் ட்ரெய்லரை யூ ட்யூபில் வெளியிட்ட முதல் நாளே, ஒரு லட்சத்து எண்பதாயிரம் பேர் கண்டு களித்திருக்கிறார்களாம். ஏன்? எல்லாம் ராஜேந்திரன் என்ற பேரழகனின் லீலை.

அதுவும் நமக்கு திரையிடப்பட்ட ட்ரெய்லரில், ஒரு குண்டாயினி குளிர குளிர குளித்துக் கொண்டிருக்க, அதை டாப் ஆங்கிளில் நின்று கவனித்துவிடும் ராஜேந்திரன் கொடுக்கிற பர்பாமென்ஸ் இருக்கே, அதற்காகவே இந்த ட்ரெய்லரை இன்னும் பத்து தடவை பிரித்து மேயலாம். ஊர் உலகமே இந்த பேரழகன் மீது பித்து பிடித்து திரிந்து கொண்டிருக்க, இவனுக்கு தண்ணியில கண்டம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு பையன் வரணுமா வேணாமா? பிரஸ் பெரும் கோபத்திற்கு ஆளாகியிருந்தது. இருந்தாலும், ‘ஏம்ப்பா… அஜீத் கூடதான் அவர் படத்து நிகழ்ச்சிக்கெல்லாம் வர மாட்டேங்குறாரு. சந்தானம் கூடதான் வர மாட்டேங்குறாரு. ராஜேந்தரன்னா மட்டமா பூடுச்சா?’ என்றெல்லாம் சமாதானமானார்கள் நிருபர்கள்.

அவரு வரலேன்னா என்ன? பேச்செல்லாம் ராஜேந்திரனானார் ஹீரோயின் நேகா. ‘எனக்கும் ராஜேந்திரன் சாருக்கும் காம்பினேஷன் காட்சிகள் இருக்கு. அவரை பார்த்ததுமே எனக்கு பயங்கரமா நடுக்கமாயிருச்சு. நான் அவரோடவெல்லாம் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டேன். ஏன்னா அவ்வளவு பயம் எனக்கு. நல்லவேளையா, அவரு கூட பழகிப்பாரு. அப்புறம் தெரியும்னு எனக்கு தைரியம் கொடுத்தார் டைரக்டர். நிஜமாவே ஜெம் அவரு’ என்றார் நேகா. (ஒரு இளஞ்சிட்டு உங்களை பற்றி பேசும்போது, எங்கிட்டு போனீங்க ராசு?)


இந்த படத்தின் மெயின் ஹீரோ தீபக்தான். நீயா நானா கோபி போலாக வேண்டும் என்கிற லட்சியத்தோடு சென்னைக்கு வரும் இவருக்கு என்னவெல்லாம் பிரச்சனைகள் வருகிறது. அதிலிருந்து மீண்டாரா என்பதுதான் கதையாம். படத்தின் தயாரிப்பாளர் வி.வெங்கட்ராஜ், தன் நண்பன் தீபக் சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்து வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவே இந்த படத்தை தயாரித்திருக்கிறாராம். பிரகாஷ்ராஜ், ராதாமோகன் படங்களில் மட்டுமே நடித்துவரும் குமரவேல் இந்த படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். அதுவே சொல்லுதே… படத்தின் தரத்தை!

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top