பீகே' புண்படுத்தியிருந்தால் மன்னியுங்கள்: ஆமிர் கான்


பீகே யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்கு தான் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக நடிகர் ஆமிர் கான் தெரிவித்துள்ளார். எந்த மத உணர்வுகளையும் காயப்படுத்தும் நோக்கோடு பீகே எடுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன் ஆமிர்கான் நடிப்பில் வெளியான பீகே, பாலிவுட்டில் மட்டுமல்லாது தேசிய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தது. அதே நேரத்தில் குறிப்பிட்ட மத உணர்வுகளை புண்படுத்தியதாக படத்துக்கு தேசிய அளவில் எதிர்ப்பும் வலுத்தது.

இவ்வளவு நாட்களாக இந்தப் சர்ச்சை குறித்து மவுனம் சாதித்து வந்த ஆமிர்கான், தற்போது இது குறித்து பேசியுள்ளார். பீகே படத்தின் டிவிடி வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆமிர் கான் பேசியதாவது:

"பெரும்பான்மையான மக்களுக்கு இந்தப் படம் பிடித்திருந்தது. ஆனால் யாரையாவது புண்படுத்தியிருந்தால் தனிப்பட்ட முறையில் அவர்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். புண்படுத்துவது என் நோக்கமே அல்ல. நாங்கள் சொல்ல நினைத்ததை சொன்னோம். ஏனென்றால் அது முக்கியமானதாகப் பட்டது. ஆனால் அது யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்"

ஆமிர்கான், அனுஷ்கா சர்மா, சஞ்சய் தத் ஆகியோர் நடிப்பில், கடந்த டிசம்பர் மாதம் 19-ஆம் தேதி வெளியான பீகே, அதிக வசூல் செய்த பாலிவுட் திரைப்படம் என்ற புதிய சாதனையை படைத்தது. இந்தியாவில் ரூ.340 கோடியும், வெளிநாடுகளில் ரூ.170 கோடியும் படம் வசூலித்ததாக தெரிவித்த ஆமிர்கான், இந்த வெற்றியை எதிர்பார்க்கவில்லை என்றும், படத்தை மக்கள் உணர்வுபூர்வமாக ரசிக்கும்போது தனக்கும் அது திருப்தியைத் தருவதாகக் கூறினார்.

படத்தின் டிவிடி குறித்து பேசிய தயாரிப்பாளர் விது வினோத் சோப்ரா, "எங்களது ஒவ்வொரு படத்திலும் எங்களுக்கான எல்லையை விரிவுபடுத்துகிறோம். எந்தப் படத்தை உருவாக்க கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆனது. படத்தொகுப்பு வேலைகள் 7 மாதங்கள் எடுத்துக் கொண்டது. இது விலைமதிப்பற்ற டிவிடி" என்றார்.

இந்த டிவிடியில் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளும் இடம்பெற்றுள்ளதாக இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி கூறினார். 

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top