இவனுக்கு தண்ணியில கண்டம் - ‘லவ்வு வந்தா எல்லாருமே ஆகுறாங்க லூசா’

கண்டம் விட்டு கண்டம் தாவுனாலும், கழுத்தா மட்டையில கயிறு போட்றானுங்கப்பா… ’ என்று ரசிகர்கள் தெறித்து ஓடுகிற அளவுக்கு வாரத்திற்கு பத்து படங்கள் குறையாமல் வருகிற நேரத்தில்தான், இந்த தண்ணியில கண்டமும் என்ட்ரி! ‘கண்டம் யாருக்குடா மாப்ளே?’ மனசோடு உள்ளே போகிற அத்தனை பேரையும் சிரிப்பால் குலுக்கி, சீராக தாலாட்டி அனுப்புகிறார் அறிமுக இயக்குனர் சக்திவேல்! அதுவும் நான் கடவுள் ராஜேந்திரன் வரும் அந்த இரண்டாம் பகுதி முழுக்க, ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்!

லோக்கல் சேனலில் வேலை பார்க்கும் தீபக், பெரும் கனவோடு சென்னைக்கு வருகிறார். இங்கு பெரிய சேனலில் நுழைந்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் தன் பக்கம் ஈர்க்க வேண்டும் என்பதுதான் அவரது ஒரே லட்சியம். அதற்கேற்ப சேனல் ஒன்றும் சிக்குகிறது. அங்கு ஒரு ட்விஸ்ட்! இன்டர்வியூவில் இவர் செலக்ட் ஆக, இவர் சேரில் வேறொருவன் வந்து அமர்கிறான். வேறென்ன ? ரெக்கமன்ட்டேஷன்தான்!

அந்த நேரத்தில் கல்யாணத்திற்கு அவசரப்படுத்தும் அம்மா, 100 கோடி சொத்துடன் ஒரு பெண் கிடைத்திருப்பதாக அழைக்க, இனிமே சொந்தமாகவே சேனல் ஆரம்பிச்சுரலாம் என்கிற கனவோடு கிளம்புகிறார் தீபக். அந்த நேரத்திலும் தனது கல்யாண செலவுக்காக மீட்டர் வட்டி, கடப்பாரை வட்டி, அதையும் தாண்டிய ஏதோ ஒரு வட்டிக்கு ஐந்து லட்சத்தை தேற்றிக் கொண்டு போனால், பொண்ணு டிரைவரோடு எஸ்கேப். ஐந்து லட்சமும் கல்யாண செலவில் கரைந்துவிட, வட்டிக்காரனுக்கு அஞ்சி ஓடும் வாழ்க்கை. இன்னொரு பக்கம் நேகாவுடனான காதலிலும் தோல்வி. அந்த நேரத்தில்தான் இவரது எதிரிகளை ஒவ்வொன்றாக போட்டுத்தள்ளுகிறான் ஒரு மர்ம ஆசாமி. ‘என்னப்பா சரவணா? இப்ப சந்தோஷம்தானே?’ என்று ஒவ்வொரு கொலை முடிந்த பின்பும் போனில் நலம் விசாரிக்கும் அந்த கொலையாளி யார்? செகன்ட் ஹாஃப்…

அதற்கப்புறம் ஒவ்வொரு முடிச்சாக அவிழ அவிழ… க்ளைமாக்சில் ஒரு பெரிய பலாப்பழத்தை ஒத்த ஆளாக ருசிச்சு தள்ளிய ஃபிரஷ்னஸ்சோடு வெளியே வருகிறான் ரசிகன். எந்த டிவிடியில் சுடப்பட்ட கதையோ? அதை நம் ஊருக்கு ஏற்றார்போல மாற்றிய விதத்தில் சக்திவேல், சரியான ஆள்தான்! (இதே கதையோடு அண்மையில் இன்னொரு படம் வந்திருப்பதால்தான் இந்த சந்தேகம்)

தீபக்குக்கு கிச்சன் கேபினட் ஏரியாவில் அறிமுகம் தேவையில்லை. அவர் ஏற்கனவே பிரபலமான சீரியல் நடிகர். இந்த சினிமா பிரமோஷன் அவருக்கு 100 சதவீதம் பொருந்தியிருப்பது அவருக்கு மட்டுமல்ல, வருங்கால இயக்குனர்களுக்கும் கதை சொல்ல ஒரு ஹீரோ கிடைச்சாச்சு மேட்டர்தான். தனது சகாக்களான சென்ட்ராயன், குமரவேலுடன் பாரில் குடித்துவிட்டு இவர் அடிக்கும் ரகளைகளை நினைத்து நினைத்து ரசிக்கலாம். அதிலும் சென்னை பாஷையை அட்சர சுத்தமாக பேசி கலக்கும் அந்த இளைஞன் யாரோ? பின்றாரு தம்பி.

ரொம்ப சிக்கலான நேரத்தில் கூட, டேய்… வெட்கப்படாமல் கேளுங்க சரவணன்டா என்று திருவாளர் பொதுஜனம் ஆச்சர்யமாவதை அவ்வளவு லைவ்வாக காண்பிக்கிறார் டைரக்டர். அந்த நேரங்களிலெல்லாம் தீபக் ஜர்க் ஆகி அடங்குவதும் செம கலகலப்பு.

தீபக்கின் காதலியாக நேகா. ஒவ்வொரு கோணத்திலும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறார். நடிப்பிலும் சோடையில்லை. நயன்தாரா, தமன்னா கிடைக்காத அடுத்த லெவல் ஹீரோக்கள் ஒரு முறை ட்ரை பண்ணி பார்க்கலாம் நேகாவை!

சென்ட்ராயன் வழக்கம் போல ஓவர் ஆக்டிங். குமரவேலுக்கு இப்படியெல்லாம் கூட நடிக்க வருமா என்ன? இப்பதான் கமர்ஷியல் புலியின் வாலை டச் பண்ணியிருக்கிறார். தொடருங்கள் குமாரு… அந்த வட்டிக்கார ஆசாமியின் கண்ணும், அவர் கடன் காரர்களுக்கு கொடுக்கிற ட்ரிட்மென்ட்டும் டெரர்ப்பா…

அப்புறம்… அப்புறம்… நம்ம அண்ணன் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன்தான்! சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் ஒரு கருங்குரங்கு போஸ்டரிலிருந்து அப்படியே பேன் பண்ணி ராஜேந்திரனுக்கு குளோஸ் அப் வைக்கிறார்கள். என்ன பொருத்தம் அப்பொருத்தம்! ஊரையே கிடுகிடுக்க வைத்த ஒரு ரவுடி, இப்படி ரிட்டையர்டு ரவுடியாக கேவலப்படுகிற சோகத்தை அவரையன்றி யாரால் அவ்வளவு சுலபமாக வெளிப்படுத்த முடியும். அந்த கரடு முரடு முகத்தில் சர்வ அலட்சியதாக வந்து விட்டு போகிறது நகைச்சுவை. அதுவும் சேசிங் அவசரத்தில் ஒரு பெண்மணி குளிப்பதை எட்டிப்பார்த்துவிட்டு, அவர் சோப்பை நழுவ விட்டதும் இவர் பதறுகிற காட்சியில் வெடித்து சிதறுகிறது தியேட்டர்.

இவர்தான் எல்லாரையும் போட்டுத்தள்ளுகிறார் என்று ரசிகர்களை நினைக்க வைத்து ட்விஸ்ட் அடிக்கும் போது, திரைக்கதையை தீட்டோ தீட்டென தீட்டியிருக்கிறார் சக்திவேல்.

சகுனம் நல்லாயிருந்தா, டிராவலும் நல்லாயிருக்கும் என்பார்கள் சென்ட்டிமென்ட் நிறைந்த சினிமாவில். அதை நிஜமாக்குவது போல படத்தின் இசை. ஏ7 பேன்ட் இசை என்ற புதிய இசைக்குழு அமைந்திருக்கிறது . ‘லவ்வு வந்தா எல்லாருமே ஆகுறாங்க லூசா’ பாடலில் தியேட்டரே எழுந்து ஆடுகிறது. மற்ற பாடல்களும் பின்னணி இசையும் கூட ஆஹாதான்.

அதிகம் உறுத்தாத, எளிமையான அழகான ஒளிப்பதிவு வெங்கடேஷின் கேமிராவில். பாராட்டுகள்.

முதல் படத்தில் சறுக்கி அடுத்த படத்திலாவது தப்பிக்கணும் என்று லென்ஸ் வைத்து இயக்குனர்களை தேடும் தயாரிப்பாளர்கள், தாராளமாக சக்திவேல் வீட்டு கதவை தட்டலாம். கஷ்டப்பட்டு பாரம் சுமப்பவர்களை எந்த கண்டத்திலிருந்தும் காப்பாற்றுவார் மனுஷன்!

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top